தேர்தல் நேரங்களில் திரைப்படங்களை வைத்து அரசியல் செய்கிறது பாஜக – சீமான் குற்றச்சாட்டு

தேர்தல் நேரங்களில் திரைப்படங்களை வைத்து பாஜக அரசியல் செய்வதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான் குற்றம்சாட்டினார்.  தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு தடை விதிக்கக் கோரி நாம் தமிழர் கட்சியின் சார்பில்…

தேர்தல் நேரங்களில் திரைப்படங்களை வைத்து பாஜக அரசியல் செய்வதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான் குற்றம்சாட்டினார். 

தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு தடை விதிக்கக் கோரி நாம் தமிழர் கட்சியின் சார்பில் சென்னை அமைந்தகரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின் அக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

‘நம் இந்திய பெரும் தேசம் என்பது பல்வேறு மொழி வழி மக்கள் ஒன்றிணைந்து இருக்கும் ஒரு தேசம். வேற்றுமையிலும் ஒற்றுமை, மதச்சார்பின்னை, சகோதரத்துவம் உள்ளிட்ட பல்வேறு கோட்பாடுகளை கொண்டு ஒற்றுமையாய் வாழக்கூடிய நாடு நமது இந்தியா. அனைவருக்கும் தெரிந்தது போல் நம் நாடு மதச்சார்பின்மை கொண்ட நாடு.

இப்போது ஆட்சி நடத்துபவர்களுக்கு மதம் தான் முக்கியம் அதைத் தவிர எதுவும் அவர்களுக்கு கவலை கிடையாது. இந்த சூழலில் மத்தியில் ஆட்சியில் உள்ள பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி ஆட்சி பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்க உள்ளது. அவர்களது ஆட்சி ஒரு கொடுங்கோல் ஆட்சி. குறிப்பாக இஸ்லாமியர்களையும் கிறிஸ்தவர்களையும் அழித்து ஒழிப்பது தான் நோக்கமாக கொண்டுள்ளனர்.

தேர்தல் நேரத்தில் திரைப்படங்களை வைத்து அரசியல் செய்கிறது பாஜக. முன்பு காஷ்மீர் பைல்ஸ் தற்போது தி கேரளா ஸ்டோரி. கர்நாடகாவில் இன்னும் சில நாட்களில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை வைத்து சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

விடுதலைக்காகப் போராடிய அனைவருமே தற்போது பாகிஸ்தானிலும் பங்களாதேஷிலும் இருக்கின்றனர். அல்லது நாடு கடத்தப்பட்டுள்ளனர். இந்த நாட்டுக்காக ஒரு போராட்டம் கூட செய்யாத ஆர்எஸ்எஸ் மற்றும் பிஜேபி 20 மாநிலங்களின் சட்டமன்றத்தில் உள்ளது. அதிபயங்கரவாதிகளிடம் இந்த நாடே சிக்கிக்கொண்டுள்ளது. ஒரு கருத்தை தீவிரமாக விவாதிப்பது தீவிரவாதம். அதற்கு மாற்றுக் கருத்து சொல்பவரை அழித்து ஒழிப்பது அதிபயங்கரவாதம். அதை தான் இப்போது பாஜக அரசு நடத்தி வருகிறது. மற்றவர்களைப் பயங்கரவாதிகள் என பட்டம் கட்டுவதை நிறுத்த வேண்டும்.

மதம் மாற்றத்தைப் பற்றி பேசுவதற்கு பாஜக அரசுக்கும் ஆர் எஸ் எஸ் இயக்கத்திற்கும் தகுதி கிடையாது. அந்தப் படத்தில் save your daughters என ஓர் வசனம் வருகிறது. அதே தான் நானும் சொல்கிறேன் இந்த படத்தை பார்க்காமல் தடுத்து நம் மக்களை காப்பாற்றுவோம். பிறப்பின் அடிப்படையில் ஒரு மனிதன் இன்னொரு மனிதனை விட உயர்ந்தவன் தாழ்ந்தவன் என ஹிந்து மதம் மட்டுமே சொல்கிறது. அதை கடைப்பிடிப்பது ஹிந்து தர்மம் என சொல்கிறது. ஆகையினால் தான் எங்கோ அரேபியாவிலிருந்த இஸ்லாமிய மதம் இங்கு வரை பரவி உள்ளது .

இவ்வாறு அவர் பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.