இனிதே நடந்து முடிந்த நம்ம ஊரு திருவிழா

அருந்தமிழ் கலைகளின் அணிவகுப்பாக சென்னை தீவுத்திடலில் நம்ம ஊரு திருவிழா மிகக் கோலாகலமாக நடைபெற்றது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில், மக்களவை உறுப்பினரும் திமுக மகளிரணி செயலாளருமான கனிமொழியின் முன்னெடுப்பில் தொடங்கப்பட்ட சென்னை…

அருந்தமிழ் கலைகளின் அணிவகுப்பாக சென்னை தீவுத்திடலில் நம்ம ஊரு திருவிழா மிகக் கோலாகலமாக நடைபெற்றது.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில், மக்களவை உறுப்பினரும் திமுக மகளிரணி செயலாளருமான கனிமொழியின் முன்னெடுப்பில் தொடங்கப்பட்ட சென்னை சங்கமம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் மறு உருவாக்கமாக அரங்கம் அதிரும் நாட்டுப்புறக் கலைகளின் அணிவகுப்பாக, நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சி சென்னை தீவுத்திடலில் கோலாகலமாக நடைபெற்றது.

தமிழ்நாடு கலைப் பண்பாட்டுத் துறை மற்றும் சுற்றுலாத் துறையின் சார்பில், அருந்தமிழ் கலைகளின் அணிவகுப்பு எனும் முன்மொழிவுடன் நடைபெற்ற இந்த மாபெரும் கலை நிகழ்ச்சியை, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சேகர்பாபு, செஞ்சி மஸ்தான், மதிவேந்தன் மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

விழாவின் தொடக்கத்திலேயே, மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக நாட்டுப்புறப்பாடகர் சின்னப்பொன்னுவின் முருகன் பாடல், நாகூர் சூஃபி கலைஞர்களின் இஸ்லாமியப் பாடல் மற்றும் கானா பாலாவின் கிறிஸ்தவ பாடல் அமைந்திருந்தது அனைவரிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

அதனைத்தொடர்ந்து, 400-க்கும் மேற்பட்ட கலைஞர்களின் ஆர்ப்பரிக்கும் நடனம், இசைக்கருவிகளின் விண்ணைப்பிளக்கும் முழக்கம் என 30-க்கும் மேற்பட்ட நாட்டுப்புறக் கலைகள் அரங்கேற்றப்பட்டன. பம்பை மேளம், சிலம்பாட்டம், கட்டைக்கூத்து, தேவராட்டம் என அடுத்தடுத்து சங்கமித்த கலைக்கதம்பத்தின் உச்சக்கட்டமாக, விண்ணதிர ஒலித்த பறையிசையில் பார்வையாளர்கள் உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தனர்.

கொரோனா பெருந்தொற்றால் வாழ்வாதாரம் கேள்விக்குறியான நிலையிலிருந்த நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு, தமிழ்நாடு அரசு சார்பில் நடத்தப்பட்ட ‘நம்ம ஊரு திருவிழா’ நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கிறார் கட்டைக்கூத்து கலைஞர் குமார்.

அழிவின் விளிம்பில் உள்ள பல தமிழ்நாட்டின் தொன்மையான நாட்டுப்புறக் கலைகளின் அணிவகுப்பைத் தொடர்ந்து, மக்கள் இசைப் பாடகர்களான சின்னப்பொண்ணு, அந்தோணிதாசன், வேல்முருகன், கானா பாலா உள்ளிட்டோரின் கணீர் குரலில் அமைந்த பாடல்கள் எனத் தமிழர் வாழ்வியல் கலைகளின் சங்கமமாக நம்ம ஊரு திருவிழாவில் அணிவகுத்தன.

நீலகிரியில் வாழும் தோடர் இன மக்களின் தொன்மையான நடனம் மற்றும் மென்மையான பாடலுடன் இனிதே நிறைவுற்ற நம்ம ஊரு திருவிழாவை பொதுமக்கள் அனைவரும் உற்சாகமாகக் கண்டு ரசித்தனர்.

தமிழர்களின் நாட்டுப்புறக் கலைகளை உலகிற்கு எடுத்துரைக்கும் ‘நம்ம ஊரு திருவிழா’வை போல் பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்பதே அனைத்து நாட்டுப்புற கலைஞர்களின் கோரிக்கையாக உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.