பரிசுத்தொகைகளை மக்களுக்கே திருப்பியளிக்கும் தலைவர் நல்லகண்ணு

தமிழகத்தில் தன்னலம் அற்ற தலைவர், மக்கள் போராளி, தமிழ் ரத்னா என்ற அடைமொழிக்கு எல்லாம் சொந்தக்காரர் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு. பதவிக்கு வந்து தொண்டு செய்தவர்களுக்கு மத்தியில் எந்த பதவியுமின்றி மக்களுக்காகவே…

தமிழகத்தில் தன்னலம் அற்ற தலைவர், மக்கள் போராளி, தமிழ் ரத்னா என்ற அடைமொழிக்கு எல்லாம் சொந்தக்காரர் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு. பதவிக்கு வந்து தொண்டு செய்தவர்களுக்கு மத்தியில் எந்த பதவியுமின்றி மக்களுக்காகவே போராடும் தலைவர்களில் முதன்மையானவர்.

எளிமையை தன் அடையாளமாக கொண்ட மாசற்ற தலைவர் நல்லக்கண்ணுவிற்கு, தமிழ்நாடுஅரசு தகைசால் தமிழர் விருது வழங்கி சிறப்பித்திருக்கிறது. கடந்த ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யாவிற்கு இவ்விருது வழங்கப்பட்டது. இந்த ஆண்டிற்கான தகைசால் தமிழர் விருதை நல்லகண்ணுவிற்கு சென்னையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

மேலும், பத்து லட்சம் ரூபாய்க்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது. அப்போது, தனக்கு வழங்கப்பட்ட 10 லட்சம் ரூபாயுடன் தனது பங்காக 5 ஆயிரம் ரூபாயை சேர்த்து முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கி அனைவரையும் வியக்க வைத்தார் அந்த எளிமையின் சிகரம். விருதுக்கான பரிசுத் தொகையை நல்லக்கண்ணு திருப்பி அளிப்பது இது முதல்முறையல்ல.

கடந்த 2005ம் ஆண்டு இவரது 80வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட முடிவு செய்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அதற்கான விழாவில், ஒரு கோடி ரூபாயை வசூலித்து அளித்து நல்லகண்ணுவின் சேவைக்கான மரியாதையைச் செலுத்த விரும்பியது. ஆனால், அதை மறுத்த நல்லகண்ணு அந்த தொகையை கட்சிக்கே திருப்பி அளித்தார். இதேபோன்று 2007ம் ஆண்டு தமிழ்நாடு அரசால் இவருக்கு அம்பேத்கர் விருதும் 1 லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டது. அப்போதும் அந்த தொகையை கட்சிக்கும் விவசாய சங்கத்திற்கும் பகிர்ந்தளித்தார் நல்லகண்ணு.

உலகெங்கும் வாழும் தமிழர்களில், ஆகச்சிறந்த ஆளுமையை தேர்ந்தெடுத்து, ‘தமிழ் ரத்னா’ விருது வழங்க முடிவெடுத்த நியூஸ் 7 தமிழ், அந்த விருதை நல்லகண்ணுவிற்கு வழங்கி கௌரவப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 80 ஆண்டு கால பொது வாழ்க்கைக்குச் சொந்தக்காரராகவும், சிறந்த பொதுவுடைமைவாதியாகவும் விளங்கும் நல்லகண்ணு, அரசியல் அதிசயம் என்றால் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.