“மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன”

நடிகையாக ஒரு கதாபாத்திரத்தில் நடித்து அல்ல, மாறாக அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து காட்டிய பழம்பெரும் நடிகை பத்மினி குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு. கேரளாவில் பிறந்த லலிதா, பத்மினி, ராகினி திருவாங்கூர் சகோதரிகள்…

நடிகையாக ஒரு கதாபாத்திரத்தில் நடித்து அல்ல, மாறாக அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து காட்டிய பழம்பெரும் நடிகை பத்மினி குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

கேரளாவில் பிறந்த லலிதா, பத்மினி, ராகினி திருவாங்கூர் சகோதரிகள் என அழைக்கப்பட்டனர். அவர்களில் தென்னிந்திய மொழிகளில் நடித்து தனித்துவத்துடன் புகழ்பெற்றவர் நடிகை பத்மினி. ஒருபுறம், சிவாஜி – பத்மினி இணையை சூப்பர் ஜோடி என கொண்டாடிய ரசிகர்கள், எம்ஜிஆருக்கு ஏற்ற ஜோடியாக மதுரை வீரன், மன்னாதிமன்னன் திரைப்படங்களில் பத்மினியை கண்டு ரசித்தனர். அதுவும் மன்னாதிமன்னன் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஆடாத மனமும் உண்டோ’ பாடல் காட்சியில் நாட்டிய பேரொளியாக பத்மினி, அழகுமிகுந்த ராஜகுமாரனாக எம்ஜிஆர் தோன்றும் காட்சியை இன்றும் ரசிக்கும் பட்டாளம் உள்ளது.

ஐம்பது வருடங்களைக் கடந்தும் தில்லானா மோகனாம்பாள் திரைப்படமும், அதன் கதாநாயகன் சிக்கல் சண்முகசுந்தரமான சிவாஜி கணேசன், மறக்கமுடியாத மோகனாம்பாளாக பத்மினியும் இன்றைக்கும் நம் கண்முன்னே நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். மகத்துவமும் தனித்துவமும் வாய்ந்த பத்மினியின் கண்கள் ஒருபக்கம் நடிக்க, கால்கள் வேறொரு விதமாக நாட்டியமாடும். முகபாவனைகள், தெள்ளத்தெளிவான வசன உச்சரிப்புகளால் பத்மினி தனியிடம் பிடித்தார். மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன பாடல் காட்சியில், முகத்தில் நவரசங்களை காட்டும் பத்மினியின் அழகு கொள்ளை கொள்ள வைக்கும்.

இதையும் படியுங்கள் : பாலின சமத்துவம் – ஏன்? எதற்காக?

வியட்நாம் வீடு திரைப்படத்தில் பிரஸ்டீஜ் பத்மநாபனின் மனைவி சாவித்திரியாக வாழ்ந்து காட்டியிருப்பார் பத்மினி, ஒவ்வொரு முறையும் ‘சாவித்ரீ…’ என சிவாஜி அழைக்க, மடிசார் புடவையுடன் உடல்மொழியால், அன்பும் பணிவுமாக நிற்பதும் என அற்புதத் தம்பதியாக இருவருமே வாழ்ந்து காட்டியிருப்பார்கள். பெற்ற பிள்ளைகள் ஆதரவின்றி தவிக்கும் நிலையில் ஒலிக்கும் ‘உன் கண்ணில் நீர்வழிந்தால்’ பாடலைக்கேட்டு கலங்காத கண்கள் உண்டா?

இப்படியெல்லாம் நடித்து அல்ல, திரைப்படங்களில் வாழ்ந்து காட்டிய பத்மினி, இந்திய ரஷ்ய கூட்டுத் தயாரிப்பான ஒரு திரைப்படத்தில் இளம் மோகனாம்பாளாக நடித்ததும், அவருக்கு அன்றைய ஒருங்கிணைந்த சோவியத் ரஷ்யா, சிறப்பு அஞ்சல் தலை வெளியிட்டதும் தனிச்சிறப்பு. ‘பூவே பூச்சூடவா’ படத்தில், பேத்தியின் அன்புக்கு ஏங்கும் பாட்டி பூங்காவனத்தம்மாவாக நடித்த பத்மினியை யாரால் மறக்க இயலும்?

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.