பாலின சமத்துவம் – ஏன்? எதற்காக?

’ஆணுக்கு நிகர் பெண்’ என்பதை காலங்காலமாக சொல்லி வருகிறோம். ஆனால் உண்மையிலேயே ஆணுக்கு நிகராக பெண்கள் போற்றப்படுகிறார்களா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். பெயரளவிற்கும் அலங்கார வார்த்தைக்காகவுமே சொல்லப்படுகிறது என்பதே நிதர்சனமான உண்மை.…

’ஆணுக்கு நிகர் பெண்’ என்பதை காலங்காலமாக சொல்லி வருகிறோம். ஆனால் உண்மையிலேயே ஆணுக்கு நிகராக பெண்கள் போற்றப்படுகிறார்களா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். பெயரளவிற்கும் அலங்கார வார்த்தைக்காகவுமே சொல்லப்படுகிறது என்பதே நிதர்சனமான உண்மை.

பெண் என்பவள் பிறக்கும்போதே பாகுபாட்டிற்கு உள்ளாகிறாள். எத்தனை ஆண் குழந்தைகள் பிறந்தாலும் சந்தோஷப்படும் குடும்பம், அடுத்தடுத்து 2 பெண் குழந்தைகள் பிறந்தால் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் பெரும்பான்மையானோருக்கு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அடுத்தடுத்து பெண் குழந்தைகள் பிறக்கும் பட்சத்தில் கள்ளிப்பால் ஊற்றி கொல்லும் கொடூரமும் நிகழ்ந்ததை கேள்விப்பட்டுள்ளோம்.

பிறக்கும்போதே பாகுபாட்டிற்கு உள்ளாகும் பெண், சிறுமியாக, இளம்பெண்ணாக, தாயாக, மூதாட்டியாக என ஒவ்வொரு காலகட்டத்திலும் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறாள். குறிப்பாக ஆணாதிக்க சமுதாயத்தில் பெண்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

குழந்தைகளை பெற்று அவைகளை பராமரிப்பது, சமையல் செய்வது, குடும்ப உறுப்பினர்களை பராமரிப்பது மட்டுமே பெண்களின் வேலை என காலங்காலமாக இந்த சமுதாயம் கட்டமைத்து வைத்துள்ளது. குறிப்பாக, ஆண்களுக்கு அடிபணிந்து போவது, இளம்வயது திருமணம், கல்வி மறுப்பு, பணி மறுப்பு, பேச்சுரிமை மறுப்பு என பல்வேறு தடைகளை பெண்கள் சந்திக்க வேண்டியுள்ளது.

இதையும் படியுங்கள் : ”வெறுப்பை தூக்கி கடாசிவிட்டு முன்னோக்கி போய் விடுங்கள்!” – செல்வராகவன் அட்வைஸ்

பாரதியார், பெரியார் போன்றோரின் அழுத்தமான குரலால் கொஞ்சம் கொஞ்சமாக பெண்ணுரிமை குறித்த விழிப்புணர்வு ஏற்பட தொடங்கியது. அதுவும் உடனடியாக நிகழ்ந்து விடவில்லை . படிப்படியாகத்தான் பெண்களுக்கான உரிமைகள் கிடைத்து வருகின்றன. மருத்துவர்களாக, பொறியாளர்களாக, விஞ்ஞானிகளாக, பல்வேறு துறைகளில் பெண்கள் சாதனை படைத்து வந்தாலும், தற்போதும் பாலின பாகுபாடு இருந்து கொண்டேதான் இருக்கிறது.

நாடாளுமன்றம், சட்டமன்றம் தொடங்கி அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் வரை ஆணுக்கு சமமான இடஒதுக்கீடு இல்லை என்றே கூறலாம். ஆணுக்கு நிகராக வேலை செய்தாலும் ஊதியம் ஆணைவிட குறைவாகவே உள்ளது. ஊராட்சி தலைவர்களாக பெண்கள் வந்தாலும் அவர்களை இயக்குவது ஆண்கள் தான் என்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது. இதேபோன்றுதான் பல்வேறு துறைகளிலும் பெண்களுக்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை. பெண்கள் உயர்பதவிகளுக்கு வந்தாலும் பெண்தானே என்ற எண்ணமே மேலோங்கியுள்ளது. பெண்களை போகப்பொருளாக பார்க்கும் மனநிலையால், சிறுமிகளும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.

தற்போது தொழில்நுட்பம், நாகரீகம் வளர்ந்து விட்டது என பெருமை பேசிக்கொண்டாலும் உலகம் முழுமைக்கும் பெண்கள் துன்புறுத்தலுக்கு ஆளாகி வருவது குறைந்தபாடில்லை. இதற்கெல்லாம் முக்கிய காரணமாக பார்க்கப்படுவது ஆணாதிக்க மனோபாவமும், பெண்களை பலவீனமாக நினைக்கும் மனோநிலைதான் காரணம் என்றால் அது மிகையில்லை. பெண்ணைவிட ஆண் உயர்ந்தவன், பலமானவன் என்ற நினைப்பு அறியாமையையே காட்டுகிறது. ஆணாக பிறப்பதும், பெண்ணாக பிறப்பதும் இயற்கை நிகழ்வு.

இதில் யார் உயர்ந்தவர்கள் என்ற வாதம் தேவையற்றது. பெண்களை, ஆண்கள் அடக்கி ஆள்வது வீரமல்ல. இந்த எதார்த்தத்தை ஆண்கள் உணர வேண்டும். பெண்களை மதிக்க வேண்டியதன் அவசியம் குறித்து ஆண் குழந்தைகளுக்கு எடுத்துக் கூறுவது அவசியம். வீடும், நாடும் உயர வேண்டும் என்றால் பெண்களின் தற்போதைய நிலை அடுத்த கட்டத்துக்கு செல்லவேண்டும். அதற்கு பாலின சமத்துவம் மிகவும் அவசியம்.

ஆண்கள் பெண்களை மதித்து அவர்கள் தங்களுக்கான உரிமையை பெறுவதை தடுக்காமல் இருந்தால் மட்டுமே பாலின பாகுபாடு படிப்படியாகக் குறையும். எந்தவொரு மாற்றமும் உடனடியாக நிகழ்வதில்லை. படிப்படியாகத் தான் இலக்கை அடைய முடியும். எனவே, பாலின பாகுபாட்டை களைந்து பாலின சமத்துவத்தை கொண்டுவர ஆண்கள் மனதளவில் தயாராகி, அதை செயல்படுத்த வேண்டும். பல்வேறு தரப்பினரும் இதை முன்னெடுக்க வேண்டியது அவசியம்.

அந்தவகையில், பாலின சமத்துவ விழிப்புணர்வை நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி முன்னெடுத்து வருகிறது. குறிப்பாக பள்ளி மாணவர்களிடம் இருந்தே இந்த முன்னெடுப்பை தொடங்கியுள்ளது. சிறார்களிடம் இருந்து தொடங்கியுள்ள இந்த
பாலின விழிப்புணர்வு நிகழ்வு பல்வேறு தரப்பினரின் பாராட்டை பெற்றுள்ளது. வீடும், நாடும் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டுமென்றால் பாலின சமத்துவம் அவசியம் என்பதில் துளியும் ஐயமில்லை.

–  கோ.லட்சுமி நாராயணன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.