மியான்மர் நிலநடுக்கம் – உயிரிழப்பு எண்ணிக்கை 694ஆக அதிகரிப்பு!

மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்ததோர் எண்ணிக்கை 694 ஆக அதிகரித்துள்ளது.

மியான்மர் மற்றும் தாய்லாந்தில் நேற்று (மார்ச் 28) அடுத்தடுத்து இரண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மியான்மரின் மாண்டலே அருகே முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவாகியிருந்தது. இதையடுத்து சிறிது நேரத்தில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக மியான்மர் மற்றும் தாய்லாந்தின் பல்வேறு இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் மிகப்பெரிய கட்டிடம் சரிந்து விழுந்தது. புதிதாக கட்டப்பட்டு வந்த கட்டிடம் இடிந்து விழுந்ததால், இடிபாடுகளில் ஏராளமான ஊழியர்கள் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து அவசர நிலை பிறப்பிக்கப்பட்டு மீட்புப்பணிகள் நடைபெற்றது.

இந்த நிலையில், மியான்மரின் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 694ஆக உயர்ந்துள்ளது. மேலும் 1670 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது. அதேபோல், தாய்லாந்தின் தலைநகர் பாங்காக் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் நிலநடுக்கத்தால் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 68 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால் தாய்லாந்த் மற்றும் மியான்மரியில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.