இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25 வது மாநில மாநாட்டில் மீண்டும் மாநில செயலாளராக இரா. முத்தரசன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சமூக நல்லிணக்க பாதுகாப்பு, மாநில உரிமைகள் மீட்பு எழுச்சி மாநாடு நடைபெற்றது. இது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25-வது மாநில மாநாடாகும். இம்மாநாடு திருப்பூர் தாராபுரம் ரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது். கடந்த ஆகஸ்ட் 6 ஆம் தேதி தொடங்கிய மாநாடு இன்று நிறைவு பெற்றுள்ளது. இறுதி நாளான இன்று 3 மணி அளவில் திருப்பூா் ஸ்ரீ சக்தி திரையரங்கம் அருகில் இருந்து செம்படைப் பேரணியானது தொடங்கி காங்கயம் சாலையில் உள்ள பத்மினி கார்டனில் நிறைவு பெற்றது. பிறகு இந்த மாநாட்டின் இறுதி நிகழ்வாக பத்மினி கார்டன் மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
மாநில மாநாட்டின் இறுதி நிகழ்வாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மீண்டும் தமிழ்நாட்டின் மாநில செயலாளராக இரா.முத்தரசன் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக முத்தரசன் மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மாநிலச் செயலாளர் பதவிக்கு சி மகேந்திரன் மற்றும் முத்தரசன் இடையே கடும் போட்டி நிலவியதாகவும் இறுதியில் ஒருமனதாக முத்தரசன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.







