சிங்கப்பூரில் பணியாற்றும் கணவனுடன், வாட்சப் வீடியோ காலில் பேசிக் கொண்டிருக்கும் போதே தகராறு ஏற்பட்டதால் கோபத்தில் கணவனின் கண் முன்பாகவே உயிரை மாய்த்துக் கொண்ட கொண்ட சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தையே உலுக்கியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், ஒட்டாரம் பகுதியை சேர்ந்தவர் செந்தில். இவர் சிங்கப்பூரில் பணியாற்றி வருகின்றார். இவரது மனைவி ஞானபாக்கியபாய் கொட்டாரம் பஞ்சாயத்து அலுவலகத்தில் தூய்மை இந்தியா திட்டத்தில் பணியாளராக பணிபுரிந்து வந்தார்.
தம்பதிக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். தினமும் சிங்கப்பூரில் இருக்கும் கணவருடன் வாட்சப் வீடியோ காலில் பேசி மகிழ்வது மனைவிக்கு வழக்கம்.
சம்பவத்தன்று இரவு குழந்தைகள் இருவரையும் தூங்க வைத்து விட்டு, வழக்கம்போல கணவர் செந்திலுடன் வாட்சப் வீடியோ கால் மூலம் ஞானபாக்கியபாய் பேசிக்கொண்டிருந்தார். குடும்ப விவகாரம் தொடர்பாக பேசிக்கொண்டிருக்கும்போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் வாக்குவாதம் முற்றியதால் கோவமடைந்த மனைவி திடீரென தான் உயிரை மாய்த்துக் கொள்ள போவதாக கண்ணீருடன் கூறியுள்ளார்.
தன்னை மிரட்டுவதற்காக மனைவி கூறுவதாக நினைத்த செந்தில் “நீ செத்து போ என கோவத்தில் கத்தியிருக்கிறார் ”. கணவனின் சொற்களால் மனமுடைந்த ஞானபாக்கியபாய் தனது செல்போனை டேபிலில் வைத்து விட்டு அறையில் இருந்த சேலையை எடுத்து, கணவன் கண்முன்பாகவே தூக்குப்போட தயாரானார். விபரீதத்தை உணர்ந்த செந்தில் மனைவியிடம் தவறான முடிவை எடுத்துவிடாதே என கெஞ்சினார். ஆவேசம் அடங்காத மனைவி கண்ணிமைக்கும் நேரத்தில் இரும்பு கம்பியில் கட்டியிருந்த சேலையை கழுத்தில் சுற்றிக் கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.
தன்னுடைய கண்முன்பாகவே நடந்த இந்த அசம்பாவித்தை பார்த்த செந்தில் சிங்கப்பூரில் இருந்து அலரி துடித்தார். ஆனால் மனைவி உயிரை மாய்த்துக் கொள்வதை தடுக்க முடியாமல் பரிதவித்து போய் உறவினருக்கு போன் செய்து, உடனே வீட்டிற்குச் சென்று மனைவியை காப்பாற்றும்படி கதறினார். உறவினரும் ஓடிச்சென்று கதவை உடைத்து படுக்கையறைக்கு சென்று பார்த்தபோது தூக்கில் தொங்கிய ஞானபாக்கியபாய் பரிதாபமாக உயிரிழந்து கிடந்தார்.
இதன் பின்னரே தூங்கிக் கொண்டிருந்த இரண்டு குழந்தைகளும் ஓடிவந்து பார்த்தபோது தன் தாய் தூக்கில் தொங்குவதை கண்டு கதறி அழுதனர். அதன் பிறகு, தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கணவன் மனைவியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் பேசி தீர்த்துக்கொள்ளாமல் உயிரிழப்பு என்ற முடிவை ஒரு நிமிடத்திற்குள் எடுத்து உயிரிழந்ததால் தற்போது தாயை இழந்து குழந்தைகள் பரிதவித்து வருகின்றனர். தம்பதிக்குள் ஏற்பட்ட வாய்த் தகராறில் கணவன் கண்முன்பாகவே மனைவி தூக்கில் தொங்கிய சம்பவம் கன்னியாகுமரி மாவட்ட மக்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.








