பெங்களூரில் நடைபெற உள்ள எதிர்கட்சி ஒருங்கிணைப்பு கூட்டத்தில்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் பங்கேற்கும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் காதர் முகைதீன் தெரிவித்துள்ளார்.
விருதுநகரில் கட்சி நிர்வாகியின் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொண்ட
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம் காதர் முகைதீன் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் தெரிவித்ததாவது..
” பிரதமர் நரேந்திர மோடி பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநரை கொண்டு குழப்பங்களை ஏற்படுத்தி வருகின்றார். வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியாவில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து பாரதிய ஜனதா கட்சியை ஆட்சியில் இருந்து அகற்ற
வேண்டும் என்பதில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம்.
பெங்களூரில் அனைத்து எதிர்கட்சி ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற உள்ளது
இதில் இந்திய முஸ்லிம் லீக் கட்சியும் கலந்து கொள்ளும். மணிப்பூர் கலவரத்தை பற்றி பிரதமர் மோடி கண்டு கொள்ளவில்லை. இந்த கலவரம் மிகப் பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது.
பொதுசிவில் சட்டத்திற்கு எதிராக பொதுமக்கள் கொந்தளித்துள்ளனர். அதிமுகவின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த போது பொது சிவில் சட்டத்தை ஆதரித்து பேசினார் . ஆனால் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் உள்ள அதிமுகவினர் பொது சிவில் சட்டத்தை எதிர்த்து வருகின்றனர் எனவே பொது சிவில் சட்டத்தை புரிந்து கொண்டு பலரும் மாறி இருப்பதாக கூறினார்.
பொது சிவில் சட்டத்தை முஸ்லிம் கட்சிகள் மட்டும் எதிர்க்கவில்லை, மலை வாழ் மக்கள் மற்றும் அனைத்து தரப்பினரும் எதிர்த்து வருகின்றனர். இஸ்லாமியர்களை நேரடியாக பாதிக்கும் விதமாக பொது சிவில் சட்டம் அமையுமானால் அதை தீவிரமாக எதிர்ப்போம்.” என காதர் மைதீன் தெரிவித்தார்.







