இந்து கோயிலில் உணவு தயாரித்து ஆதரவற்றோருக்கு உதவி வரும் இஸ்லாமியருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் தொற்றை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக, அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு காரணமாக ஏழை மக்கள், ஆதரவற்றோர், சாலையோரங்களில் வசிக்கும் மக்கள் என பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தன்னார் வலர்கள் உணவு வழங்கி வருகின்றனர். இந்நிலையில் இந்து கோயிலில் உணவு தயாரித்து ஆதரவற்றோருக்கு வழங்கி வரும் இஸ்லாமியர் ஒருவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ஆட்டோ ஓட்டுனராக பணிபுரிபவர் செய்யது கனி (40). இவர் எமனேஸ்வரம் பகுதியில் உள்ள உய்யவந்தாள் அம்மன் கோவிலில் தனது சொந்த செலவில் சுமார் 200 பேருக்கு உணவு சமைக்கிறார். தினமும் வெஜிடபிள் பிரியாணி, சாம்பார் சாதம், தயிர்சாதம் என தயாரித்து முன்களப் பணியாளர்கள், ஆதரவற்றோர், ஏழை மக்கள் என சுமார் 200 பேருக்கு மேல் உணவு பொட்டலங்களை தனது ஆட்டோவில் ஏற்றிச் சென்றது வழங்கி வருகிறார்.
அம்மன் கோவிலில் உணவு தயாரித்து ஏழை எளியோருக்கு வழங்கும் செய்யது கனியின் சேவையை பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர்.







