அரியலூரில் மூதாட்டியைக் கொடூரமாகக் கொலை செய்து நகைகளைத் திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகேயுள்ள முன்னூரான் காடுவெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மூதாட்டி காத்தாயி. இவருக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தினமும் காலை வயலுக்குச் சென்று விட்டு மீண்டும் மாலையில் வீடு திரும்புவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்நிலையில் நேற்று காலை வயலுக்கு சென்ற மூதாட்டி அந்தப் பகுதியிலுள்ள நீர் வரத்து உள்ள ஓடை பகுதியில் நீரில் மூழ்கிய நிலையில் கிடந்துள்ளார். அப்போது அவ்வழியே வந்த பக்கத்து வயலில் வேலை செய்பவர்கள் தண்ணீரில் மூழ்கிக் கிடந்த மூதாட்டியைப் பார்த்துவிட்டு அவரது உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்தனர். அங்கு வந்து பார்த்த உறவினர்கள் மூதாட்டி இறந்ததை உறுதி செய்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனையடுத்து ஆண்டிமடம் காவல் துறையினருக்கு இச்சம்பவம் குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மூதாட்டியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில் இரு காதுகளிலும் அணிந்திருந்த அரை பவுன் மதிப்புள்ள தோடுகளையும் மூக்கில் அணிந்திருந்த மூக்குத்தியையும் கையால் அறுத்து எடுத்துவிட்டு பின்பு அதே இடத்தில் ஓடையிலுள்ள குறைந்த தண்ணீரில் அமுக்கி கொலை செய்துவிட்டு மர்ம நபர்கள் தப்பிச் சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஆண்டிமடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதேபோல் ஆண்டிமடம் அருகேயுள்ள அகினேஸ்புரம் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த நட்சத்திரமேரி என்ற மூதாட்டியின் ஒரு காது தோட்டை மர்ம நபர்கள் அறுத்து சென்றதாகவும் தோடு கவரிங் என்பதால் புகார் அளிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.