நெல்லையில் காய்கறி வியாபாரம் செய்துவந்த சகோதரர்கள் கொலை

நெல்லையில் காய்கறி வியாபாரம் செய்துவந்த சகோதரர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் வத்தலகுண்டு காமராஜர்புரத்தை சேர்ந்த நாகராஜ் என்பவர் பேரூராட்சி தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிரார். இவருக்கு மணிகண்டன் மற்றும்…

நெல்லையில் காய்கறி வியாபாரம் செய்துவந்த சகோதரர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் வத்தலகுண்டு காமராஜர்புரத்தை சேர்ந்த நாகராஜ் என்பவர் பேரூராட்சி தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிரார். இவருக்கு மணிகண்டன் மற்றும் சபரீஸ்வரன் என இரு மகன்கள் இருந்தனர். மணிகண்டன் லோடு ஆட்டோவில் காய்கறி வியாபாரம் செய்து வந்துள்ளார். கடந்த 1-ம் தேதி திண்டுக்கல்லில் இருந்து நெல்லைக்கு காய்கறி விற்பனை செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது 8-ம் வகுப்பு படிக்கும் சபரீஸ்வரனும் தனது அண்ணனுடன் சென்றுள்ளார். சுத்தமல்லி பகுதியில் இருவரும் தங்கியிருந்து காய்கறி வியாபாரம் செய்து வந்துள்ளனர். கடந்த வாரம் முதல் இருவரையும் தொடர்பு கொள்ள முடியாததால், அவரது பெற்றோர் சுத்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். எனினும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனையடுத்து, சுத்தமல்லி அடுத்த திருப்பணிகரிசல்குளம் பகுதியில் மணிகண்டனுக்கு சொந்தமான லோடு ஆட்டோ மட்டும் நின்றதை உறவினர்கள் கண்டறிந்துள்ளனர். இதன் பின்னரே போலீசார் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் தேடியதாக கூறப்படுகிறது. 10 நாட்கள் தேடுதலுக்கு பிறகு மணிகண்டனின் உடலை மட்டும் அழுகிய நிலையில் கண்டுபிடித்துள்ளனர். 13 வயதான அவரது தம்பி சபரீசனின் உடலின் சில பாகங்கள் மட்டுமே கிடைத்ததாக தெரியவந்துள்ளது.

இதனையடுத்து இருவரது உடல்களும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த உறவினர்கள், தங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றும் அனைத்து இடங்களிலும் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் வேதனையுடன் கதறி அழுதனர்.

சகோதரர்களை கொலை செய்ததாக சுத்தமல்லி ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்த சதீஷ் குமார் மற்றும் பார்த்திபன் ஆகிய சகோதரர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மணிகண்டன் மற்றும் சபரீசனிடம் இருந்த பணத்தை கைப்பற்றுவதற்காக, மது போதையில் கொலை செய்ததாக தெரிவித்துள்ளனர். வாழ்வாதாரத்திற்காக ஊர் ஊராக சென்று காய்கறி வியாபாரத்தில் ஈடுபட்ட சகோதரர்கள் பணத்திற்காக கொலை செய்யபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.