அதிமுகவில் தற்போது நடைபெறும் உட்கட்சி பிரச்சனையை அவர்களே பேசி தீர்த்துக்கொள்வார்கள் என்றும் அதில் பாஜக தலையிட முடியாது என்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கருத்து தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரா வளாகத்தில் மத்திய மாநில அரசுகள் இணைந்து
நடத்திய உலக யோகா தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மத்திய அரசு சார்பில்
மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கலந்து கொண்டார். மாநில அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் அரவிந்த், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹரிகிரண் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த எல். முருகன் 75 வது
ஆண்டு சுதந்திர தினத்தை ஒட்டி நாடு முழுவதும் 75 நாட்கள் யோகாசன பயிற்சி
நடைபெறுவதாகக் கூறினார். 75 வது நாளாக வரும் 21 ம் தேதி நாடு முழுவதும் 75 இடங்களில் யோகாசன பயிற்சி நடைபெற உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
‘அக்னிபாத்’ திட்டம் இளைஞர்களிடையே தேச பக்தியை வளர்க்கும் என்றும்
அவர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கும் என்றும் கூறினார்.
அதிமுகவில் தற்போது நடக்கும் பிரச்சனையை சாதகமாகவோ பாதகமாகவோ பாஜக பார்க்கவில்லை என்று கூறிய எல்.முருகன், அது அவர்களின் உட்கட்சி பிரச்சினை என்றார். இன்று சண்டை போடுவார்கள், நாளை சேர்ந்து கொள்வார்கள் என்றும் எல்.முருகன் குறிப்பிட்டார். பாஜகவினை மேலும் வளர்த்து பலப்படுத்துவதே தங்களது நோக்கம் என்று குறிப்பிட்ட மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அதிமுகவின் உட்கட்சி பிரச்சினையில் பாஜக தலையிட முடியாது என்றார். அதிமுகவினர் தங்களது கட்சியில் ஏற்பட்டுள்ள பிரச்சனையை தாங்களே பேசி தீர்த்துக்கொள்வார்கள் என்றும் எல்.முருகன் கூறினார்,








