மாநகராட்சியுடன் பேரூராட்சிகள் இணைப்பு? – அமைச்சர் கே.என்.நேரு

நூறு நாள் வேலைத் திட்டம் இல்லையென்பதால் மாநகராட்சியுடன் இணைய பேரூராட்சிகள் விரும்புவதில்லை என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தலைமையில் கடந்த 18 மற்றும் 19ம் தேதிகளில் 2022-23ம் நிதியாண்டுக்கான…

நூறு நாள் வேலைத் திட்டம் இல்லையென்பதால் மாநகராட்சியுடன் இணைய பேரூராட்சிகள் விரும்புவதில்லை என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தலைமையில் கடந்த 18 மற்றும் 19ம் தேதிகளில் 2022-23ம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் நடைபெற்றது. இதில் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் மற்றும் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்தனர். இதனையடுத்து இன்று காலை 10 மணியிலிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பட்ஜெட் மீதான விவாதம் சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது.

இதனையடுத்து விவாதத்தில், செங்குன்றம் பேரூராட்சியை பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா என மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, செங்குன்றத்தில் 40,000 மக்கள் இருப்பதால் இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பேசி அனுமதி பெற்றதும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார். மேலும் உள்ளாட்சித் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியாது எனவும், தாமதமாக பணிகள் நடைபெறும் எனவும் கூறினார்.

இதனையடுத்து நூறு நாள் வேலைத் திட்டம் இல்லையென்பதால் மாநகராட்சியுடன் இணைய பேரூராட்சிகள் விரும்புவதில்லை எனக் குறிப்பிட்ட அமைச்சர் கே.என்.நேரு, குழு அமைத்து மக்கள்தொகை அதிகமுள்ள பகுதிகளில், தரம் உயர்த்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனக் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.