தமிழ்நாடு சட்டசபையில் இன்று பட்ஜெட் தாக்கல்

2022-2023ஆம் நிதி ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை, சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட இருக்கிறது. கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்ததை அடுத்து, கடந்த ஆண்டு…

2022-2023ஆம் நிதி ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை, சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட இருக்கிறது.

கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்ததை அடுத்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13-ம் தேதி, அரசின் திருத்திய நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இந்நிலையில், வரும் 2022-23-ம் நிதியாண்டுக்கான முழுமையான நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட இருக்கிறது. தொடர்ந்து அலுவல் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டு எத்தனை நாட்கள் பேரவை கூட்டம் நடத்தப்படும் என்பது குறித்து முடிவெடுக்கப்படும். காகிதம் இல்லாத பட்ஜெட் என்பதால் சட்டசபையில் எம்.எல்.ஏ.க்களுக்கு பட்ஜெட் நகல் வழங்கப்படாது.

இன்று தாக்கல் செய்யப்படும் நிதிநிலை அறிக்கையில், புதிய அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை, மாதம்தோறும் மின்கட்டணம் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் குறித்த அறிவிப்புகள் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் முதல்முறையாக வேளாண் துறைக்கான தனி நிதிநிலை அறிக்கை கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல், இந்த ஆண்டும் தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட இருக்கிறது. வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இதனை தாக்கல் செய்ய உள்ளார். இதில் வேளாண் துறை மேம்பாட்டுக்கான பல்வேறு அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.