நம்மைக்காக்கும் 48 திட்டத்தின் மூலம் இதுவரை 33,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் 2022 – 23ம் ஆண்டுக்கான நிதிநிலை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை கடந்த 18, 19 ஆகிய தேதிகளில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகரானால் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை குறித்த பல்வேறு அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து பட்ஜட் மீதான விவாதம் இன்று தொடங்கியது. இதில் சாலை விபத்துகளைக் குறைக்க உரிய வழிகாட்டுதல்களை வகுக்க அரசு முன் வருமா என்று பாமக எம்.எல்.ஏ அருள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர், எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோதே சாலை விபத்து குறித்து கவலை தெரிவித்திருக்கிறேன்.
சாலை விபத்துகளை குறைப்பதே அரசின் முதன்மையான இலக்கு. திமுக ஆட்சிக்கு வந்தவுடன், சாலைகளில் மக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதே முதல் இலக்காக இருந்தது. கடந்த டிசம்பர் 18 2021ம் தேதியில் இன்னுயிர் காப்போம், நம்மைக் காப்போம் 48 திட்டம் தொடங்கப்பட்டது. சீரான சாலை திட்டம், விபத்தில் சிக்கும் அனைவருக்கும் 48 மணி நேர இலவச சிகிச்சை, இன்னுயிர் காப்போம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் சாலைகளில் பாதுகாப்பாக பயணம் செய்ய சூழல் உருவாக்கப்பட்டது. 18 மார்ச் 2022 வரை 33,247 பேர் 48 மணி நேர இலவச சிகிச்சையைப் பெற்றுள்ளனர் என்று தெரிவித்தார்.
நம்மை காப்போம் 48 திட்டத்தின் கீழ் இதுவரை 33,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் காப்பாற்றப்பட்டுள்ளது என்று தெரிவித்த முதலமைச்சர், சாலை விபத்தில் சிக்கியவர்களை Golden Hoursஇல் மருத்துவமனையில் அனுமதிக்கும் நபர்களுக்கு ரூ.5,000 ரொக்கம், நற்சான்று வழங்கப்படுவதாகவும் கூறினார். மேலும் இந்த திட்டத்திற்காக இதுவரை 29.56 கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும், இனிவரும் காலங்களிலும் தீவிரமாக செயல்படுவோம் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.








