‘ஹால் ஆப் பேம்’ பட்டியலில் இடம்பெற்ற எம்.எஸ் தோனி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இபிஎஸ் வாழ்த்து!

ஹால் ஆஃப் ஃபேம் பட்யலில் இடம்பெற்றுள்ள எம்.எஸ்.தோனிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (I.C.C. – ஐசிசி) சார்பில் கிரிக்கெட்டில் சிறந்து விளங்குவோரை மதிப்புமிக்க வீரராக கருதி ஹால் ஆஃப் ஃபேம் (Hall of Fame) பட்டியலில் கௌரவிக்கப்படும். இந்த கௌரவமிக்க பட்டியலில் புதிதாக 7 வீரர்களை சேர்த்து ஐசிசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி இடம்பெற்றுள்ளார்.

மேலும், ஆஸ்திரேலியாவின் முன்னாள் தொடக்க வீரர் மேத்யூ ஹைடன், சவுத் ஆப்பிரிக்காவின் ஹாசிம் ஆம்லா, கிரேம் ஸ்மித் மற்றும் நியூசிலாந்தின் டேனியல் வெட்டோரி ஆகியோரும் சேர்கப்பட்டுள்ளனர். அதனுடன், பாகிஸ்தான் வீராங்கனை சனா மிர் மற்றும் இங்கிலாந்தின் சாரா டெய்லர் ஆகியோரும் இந்த பட்டியலில் இணைந்துள்ளனர்.

இதன்மூலம், ஐசிசி ஹால் ஆப் பேமில் இடம் பெற்ற முதல் பாகிஸ்தான் வீராங்கனை என்ற பெருமையை சனா மிர் பெற்றுள்ளார். இந்திய வீரர்களான பிஷன்சிங் பெடி, கவாஸ்கர், கபில்தேவ், கும்ப்ளே , ராகுல் டிராவிட் உள்ளிட்டோர் ஏற்கனவே இந்த கெளரவத்தை பெற்றுள்ளனர். அந்த வகையில், எம்.எஸ்.தோனி 11வது இந்திய வீரராக இதில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், ஹால் ஆஃப் ஃபேம் பட்யலில் இடம்பெற்றுள்ள எம்.எஸ்.தோனிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

“ஐசிசியின் ஹால் ஆஃப் ஃபேமில் சேர்க்கப்பட்டுள்ள தோனிக்கு வாழ்த்துகள்; ஒரு சிறந்த பாரம்பரியத்தை உருவாக்கியவர்; நிதானத்தின் மூலம் தலைமைத்துவத்தை மறுவரையறை செய்தவர்; விக்கெட் கீப்பிங்கை ஒரு கலையாக மாற்றியவர்; தெளிவு & உறுதியின் மூலம் ஒரு தலைமுறையே ஊக்கப்படுத்தியவர்; உங்களது பயணம் இப்போது கிரிக்கெட் வரலாற்றில் நிலை பெற்றுள்ளது; எப்போதும் நீங்கள் ‘Thala For A Reason’ என புகழப்படுவீர்கள்”

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

“2007ம் ஆண்டு டி20 உலக கோப்பையில் இருந்து 2011 உலக கோப்பையை சிக்ஸர் மூலம் வென்றது வரை அனைத்தும் கிரிக்கெட் ரசிகர்களின் இதயத்தில் பதிந்துள்ளன. அமைதியான முறையில் அணியை வழிநடத்தி இந்திய கிரிக்கெட்டுக்கு பொற்காலத்தை வழங்கிய எம்.எஸ்.தோனிக்கு பொருத்தமான மரியாதை”

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.