திறக்கப்பட்டது தாஜ்மஹால்: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

இந்திய தொல்லியல் துறையின் கீழ்வரும் நினைவுச்சின்னங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் சுற்றுலா தளங்கள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில்வரும் சுற்றுலா தளங்கள், நினைவுச் சின்னங்கள்…

இந்திய தொல்லியல் துறையின் கீழ்வரும் நினைவுச்சின்னங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் சுற்றுலா தளங்கள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது.

கொரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில்வரும் சுற்றுலா தளங்கள், நினைவுச் சின்னங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேல் மூடப்பட்டு இருந்தது. இந்நிலையில் இவை அனைத்தும் சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்படும் என இந்திய தொல்லியல் துறை கடந்த 15-ம் தேதி அறிவித்தது.

கொரோனா இரண்டாம் அலையின் தாக்கத்தால் சுற்றுலா தளங்கள் பெரிதும் பாதிப்பிற்கு உள்ளானது. கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவது தளர்வுகளற்ற ஊரடங்கு முறைகள் பின்பற்றப்பட்டுவருகிறது.
இந்நிலையில் நாட்டில் கடந்த சில வாரங்களாக கொரோனாவின் தாக்கம் குறைந்து வருகிறது. குறிப்பாக கொரோனா தாக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நகரமாக இருந்த டெல்லி தற்போது நோய் தொற்று குறைந்து காணப்படுகிறது.

இதன்காரணமாக இந்திய தொல்லியல்துறை தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ்வரும் சுற்றுலா தளங்களை திறக்கப்படும் என அறிவித்தது. இதனையடுத்து நாடு முழுவதும் உள்ள 3,693 நினைவுச்சின்னங்கள் மற்றும் 50 அருங்காட்சியகங்களுக்கு சுற்றுலா பயணிகள் வருகைதர இன்றுமுதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்திய தொல்லியல்துறை அறிவிப்பின்படி சுற்றுலா பயணிகள் சுற்றுலா தளத்திற்கான டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் மட்டுமே முன் பதிவு செய்துகொள்ள முடியும், நேரில் சென்று பதிவு செய்ய முடியாது.

சுற்றுலாதளங்கள் திறக்கப்பட்டதை அடுத்து உலக நினைவுச்சின்னங்களில் ஒன்றான தாஜ்மஹால் சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்பட்டது. தாஜ்மஹால் அமைந்துள்ள ஆக்ரா மாவட்ட நீதிபதி பிரபு என் சிங் கூறுகையில், பார்வையாளர்களுக்காக சுற்றுலாத்தலங்கள் திறக்கப்படும் போது, சுற்றுலாப்பயணிகள் 650 பேர் மட்டுமே தாஜ்மஹாலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.

மேலும்ஆக்ரா வட்டம் தொல்பொருள் ஆய்வாளர் வசந்த்குமார் கூறுகையில்,“தாஜ்மஹால் ஒரு நாளைக்கு மூன்று முறை சுத்திகரிக்கப்படும். சுற்றுலாப் பயணிகள் முக கவசம் அணிவது கட்டாயம், சானிடைசர்கள் மூலம் சுத்திகரிக்கப்பட்ட பின்னரே சுற்றுலாப்பயணிகள் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள், பார்வையாளர்கள் நினைவுச்சின்ன வளாகத்தில் எந்தவொரு பொருளையும் தொட அனுமதிக்க மாட்டார்கள், அவர்கள் சமூக இடைவெளிகளை பின்பற்ற வேண்டும்” என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.