பேரறிவாளனுக்கு பரோல் அளித்ததற்காக முதலமைச்சரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்ததாக அவரது தாயார் அற்புதமம்மாள் கூறியுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு, மருத்துவ காரணங்களுக்காக பரோல் அளிக்கவேண்டும் என அவரது தாயார் அற்புதமம்மாள் மனு அளித்திருந்தார். இதையடுத்து, பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதையடுத்து பேரறிவாளன் தன்னுடைய வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பேரறிவாளன் தாயார் அற்புதமம்மாள் நேரில் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அற்புதமம்மாள் பேசியதாவது, “என் மகன் பேரறிவாளனுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளதால் அவனுக்கு பரோல் வழங்கவேண்டும் என்று முதலமைச்சருக்குக் கோரிக்கை மனு அளித்திருந்தேன். என் கோரிக்கையை ஏற்று உடனடியாக முதலமைச்சர் ஸ்டாலின் 30 நாட்கள் பரோல் வழங்கினார்.
தற்போது அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் முதலமைச்சரை இன்று சந்தித்துப் பேசினேன். பேரறிவாளனுக்குத் தொடர்ந்து சிகிச்சை நடைபெறவேண்டும். தற்போதுதான் மருத்துவச் சிகிச்சை தொடங்கி இருக்கிறோம். பேரறிவாளனுக்கு முறையாகச் சிகிச்சை மேற்கொள்ளாத காரணத்தால் அவனுக்கு உடல்நலன் குறைவு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து சிகிச்சை அளிக்கவேண்டும். அதற்காக பரோல் நாட்களை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முதல்வரிடம் வைத்துள்ளேன்.
என்னுடைய இந்த கோரிக்கையை நிறைவேற்றித் தருவதாக முதலமைச்சர் உறுதி அளித்துள்ளார். பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலை தொடர்பாக நான் என்ன உணர்வோடு இருக்கிறேனோ அதே உணர்வோடு முதலமைச்சர் ஸ்டாலினும் இருப்பதாகக் கூறினார்” என அற்புதமம்மாள் தெரிவித்துள்ளார்.







