குஜராத்தி நாட்டுப்புற பாடகர் கிர்திதன் காத்வியின் பஜனை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மக்கள், அவர் மீது பண மழையை பொழிந்த நிகழ்வு நெட்டிசன்களால் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
குஜராத்தின் வல்சாத் நகரில் சனிக்கிழமையான நேற்று, குஜராத்தி நாட்டுப்புற பாடகர் கிர்திதன் காத்வியின் பஜனை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை காண்பதற்காக ஏராளமானோர் குவிந்தனர். மேடையில் கிர்திதன் காத்வியின் பஜனை பாடல்களை கேட்ட மக்கள், பக்தி பரவசத்தில் ஆழ்ந்ததோடு, ஒரு கட்டத்திற்கு மேல் மிகவும் குதூகலமாகி தங்களிடம் இருந்த 10, 20,100 ரூபாய் கரன்சி நோட்டுகளை எடுத்து, மேடையை நோக்கி வீசினர்.
குஜராத்தில் பஜனை நிகழ்ச்சிகளில் இதுபோன்று பணம் பொழியும் சம்பவங்கள் மிகவும் பொதுவானவை என்றாலும், குஜராத்தி நாட்டுப்புற பாடகர் கிர்திதன் காத்வி மீது பண மழை பொழியும் நிகழ்வு வீடியோக எடுக்கப்பட்டு தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
ஏற்கனவே, டிசம்பர் 2022 -இல், குஜராத்தின் நவ்சாரி கிராமத்தில் கிர்திதன் காத்வியின் பஜனை நிகழ்ச்சியில் சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 10, 20, 100 ரூபாய் நோட்டுகள் பண மழையாக பொழிந்த நிகழ்வு நடந்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த பாடகர் கிர்திதன் காத்வி , பஜனை நிகழ்ச்சிகளில் தினமும் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள 10, 20, 50, 100 ரூபாய் நோட்டுகளை மக்கள் பொழிகிறார்கள்,” இதை பார்க்கும் போது மிகவும் நெகிழ்வாகவும், சந்தோசமாகவும் உள்ளது.
அதிலும் குறிப்பாக டிசம்பர் 2022 -ல் இதுபோன்ற ஒரு பஜனை நிகழ்வு, சுவாமி விவேகானந்தர் கண் கோயில் அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்டு, அதன் மூலம் அவர்களின் புதிய கண் மருத்துவமனைக்கு நிதி சேகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. “இந்த நிகழ்வின் போது சுமார் 40-50 லட்சம் நன்கொடைகள் கிடைக்கப்பெற்றது. இதுபோன்ற நல்ல காரியங்களுக்கும் எனது பஜனை நிகழ்ச்சி ஒரு தூண்டுகோலாக இருப்பது மன நிறைவை தருகிறது என்று பாடகர் கிர்திதன் காத்வி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது குஜராத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியிலும், பாடகர் கிர்திதன் காத்வி மீது மக்கள் பண மழையை பொலிந்து தங்கள் அன்பை வெளிப்படுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதோடு, பார்ப்பவர்களையும் நெகிழ வைத்துள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா









