“MONEY HEIST” வெப் சீரிஸ் போன்று சுரங்கம் தோண்டி கோடிக்கணக்கில் தங்க நகைகளை கொள்ளயடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் கொண்டாடிய வெப் சீரிஸ் “MONEY HEIST”. சூப்பர் ஹீரோ படங்களை வரவேற்றது போல வங்கி கொள்ளையை மையமாக கொண்ட “MONEY HEIST” பெரும் வரவேற்பை பெற்றது. இந்த வெப் சீரிஸ் வெளியான பிறகு இதைப்போல பல இடங்களில் வங்கி கொள்ளை சம்பவங்கள் கூட நடந்தது. தற்போது “MONEY HEIST” தொடரைப் போலவே உத்தரபிரதேசம் கான்பூரில் திடுக்கிட வைக்கும் வகையிலான வங்கி கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டம் பஹ்தி பகுதியில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியை கடந்த 24 ஆம் தேதி ஊழியர்கள் வழக்கம்போல திறந்து பணிக்கு வந்தனர். அப்போது வங்கியின் பணம், தங்க நகைகள் பெட்டகம் வைக்கப்பட்டுள்ள அறைக்குள் சுரங்கம் தோண்டி கொள்ளையர்கள் நுழைந்தது தெரியவந்தது. வங்கியில் இருந்த 1 கோடி ரூபாய் மதிப்புள்ள 1.8 கிலோ தங்கத்தையும் கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றதை கண்டு வங்கி ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். வங்கி அதிகாரிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் வங்கிக்குள் வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தடயவியல் துறையினர் வங்கிக்கு வந்து தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாய் உதவியோடு கொள்ளையர்கள் எந்த வழியாக தப்பி சென்றார்கள் என்பதனை கண்டறியும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.
விசாரணையில், கான்பூர் மாவட்டம் பஹ்தி பகுதியில் உள்ள எஸ்பிஐ வங்கிக்கு பின் பகுதியில் உள்ள காலி இடத்தில் இருந்து 10 அடி நீளத்திற்கு பள்ளம் தோண்டி வங்கியின் பணம், தங்க நகைகள் வைத்திருக்கும் லாக்கருக்குள் நுழைந்து கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியது தெரிய வந்தது. 1.8 கிலோ தங்க நகைகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர். மேலும், 32 லட்ச ரூபாய் வைத்திருந்த லாக்கரை உடைக்க முடியாததால் அதை விட்டுவிட்டு சுமார் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள 1.8 கிலோ தங்கத்தை கொள்ளையடித்து சென்றிருந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
10 அடி நீளம், 4 அகலத்திற்கும் குழி தோண்டி சுரங்கம் அமைத்து இரவே வங்கிக்குள் நுழைந்த கொள்ளையர்கள் அங்கேயே இருந்து தங்க நகைகளை திரைப்பட பாணியில் கொள்ளையடித்து சென்றுள்ளதை காவல்துறையினர் விசாரணையில் கண்டுபிடித்துள்ளனர். கொள்ளையர்கள் வங்கிக்குள் நுழைந்ததும் முதலில் அலாரம், சிசிடிவிக்களை செயலிழக்க செய்துள்ளனர். வங்கியை நன்கு நோட்டமிட்டு அனைத்து விவரங்களையும் அறிந்த கும்பல் தான் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கேஸ் கட்டர் மூலம் வங்கி லாக்கரை கொள்ளையர்கள் உடைத்துள்ளனர்.
கொள்ளை நடந்த வங்கியில் 29 வாடிக்கையாளர்கள் அடமானம் வைத்திருந்த தங்க நகைகளையே கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர் என்று வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொள்ளை தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கொள்ளையர்களை கண்டுபிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் காவல்துறை மும்முரமாக களமிறங்கியுள்ளது. கொள்ளையர்கள் தோண்டிய சுரங்கம் காலி நிலத்தில் இருந்து நேரிடையாக வங்கியின் லாக்கர் அறைக்கு செல்கிறது. இதனால் வங்கிக்குள் இருக்கும் பகுதி குறித்து நன்கு தெரிந்தவர்களே கொள்ளையர்களுக்கு துப்பு கொடுத்து இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கொள்ளையில் வங்கி ஊழியர்களுக்கு தொடர்பு இருப்பதாக காவல்துறையினர் சந்தேகித்துள்ளனர். கொள்ளையர்களின் கைரேகைகள் கிடைத்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வங்கியின் வெளிப்புற பகுதியில் கழிவு பொருட்கள் போடப்பட்டுள்ளது. அதந்த இடத்தில் தான் கொள்ளையர்கள் சுரங்கம் தோண்டி உள்ளனர் என்பது காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதே போன்று 1997 ஆம் ஆண்டு கான்பூர் கோவிந்த் நகர் எஸ்பிஐ வங்கிக் கிளையில் சுரங்கம் தோண்டி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.