மகாகவி பாரதியின் பேத்தி மறைவு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

இசையாசிரியரும் மகாகவி பாரதியாரின் மகள் வழிப் பேத்தியுமான லலிதா பாரதி அம்மையாரின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.  இந்திய நாட்டின் விடுதலைக்காக தன்னுடைய பாடல்களாலும், கவிதைகளாலும் போராடியவர் மகாகவி பாரதியார். 1882ம் ஆண்டு…

இசையாசிரியரும் மகாகவி பாரதியாரின் மகள் வழிப் பேத்தியுமான லலிதா பாரதி அம்மையாரின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

இந்திய நாட்டின் விடுதலைக்காக தன்னுடைய பாடல்களாலும், கவிதைகளாலும் போராடியவர் மகாகவி பாரதியார். 1882ம் ஆண்டு எட்டயபுரத்தில் பிறந்த இவர், தமிழ், தமிழர் நலன், சாதிய மறுப்பு, பெண் விடுதலை, இந்திய விடுதலை உள்ளிட்ட பலவற்றிற்காக குரல் கொடுத்தவர்.

மகாகவி பாரதியாரின் மகள்வழிப் பேத்தியும், இசையாசிரியருமான லலிதா பாரதி அம்மையார், வயது மூப்பு காரணமாக இன்று உயிரிழந்தார். அவரது உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், இலக்கியத் துறையினரும், திரையுலகினரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், லலிதா பாரதி அம்மையாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிறந்த கவிஞரும் இசையாசிரியரும் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் மகள் வயிற்றுப் பேத்தியுமான லலிதா பாரதி அம்மையார்(94), வயது முதிர்வின் காரணமாக இயற்கை எய்தினார் என்றறிந்து மிகவும் வருந்துகிறேன்.

மகாகவி பாரதியாரின் மூத்த மகள் தங்கம்மாளின் மகளான லலிதா பாரதி, 40 ஆண்டுகளாக இசையாசிரியராகப் பணியாற்றிவர் என்பதோடு, பாரதியாரின் பாடல்களை இசைவடிவில் பரப்பும் தமிழ்ப்பணியிலும் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தலைசிறந்த தமிழ்க்குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களுள் ஒருவரான லலிதா பாரதியின் மறைவால் வாடும் அவர்தம் உறவினர்கள், தமிழார்வலர்கள் உள்ளிட்டோர்க்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.