குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை நவீன முறையில் மேற்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் தகவல் பலகை தரவுகளின் அடிப்படையில் பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது வருவாய்த் துறையால் வழங்கப்படும் சாதிச் சான்றிதழ், வசிப்பிடச் சான்றிதழ், வருவாய் சான்றிதழ், வாரிசு சான்றிதழ் மற்றும் பட்டா ஆகியவற்றை தாமதமின்றி வழங்க முதலமைச்சர் அறிவுறுத்தினார். நகராட்சி நிர்வாகத் துறையின் கீழ் மேற்கொள்ளப்படும் மழைநீர் வடிகால்கள், பாதாள சாக்கடைப் பணிகள், சாலை மேம்பாட்டுத் திட்டப் பணிகள் ஆகியவை குறித்து முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.
போக்குவரத்துத் துறையில் போதுமான பேருந்து சேவைகள் இயக்கப்பட வேண்டும் என்றும் பேருந்து நிலையங்களில் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் முதலமைச்சர் அறிவுரை வழங்கினார். குற்றநிகழ்வுகளின் எண்ணிக்கையை மாவட்ட வாரியாக ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை நவீன முறையில் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.







