நரேந்திர மோடி 3வது முறையாக மீண்டும் பிரதமர் ஆவார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலில் 3-வது முறையாக வெற்றி பெறும் முனைப்பில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி கன்னியாகுமரி அருகே உள்ள அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற பாஜகவின் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
இந்த கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாவது:
மோடி 3-வது முறையாக மீண்டும் பிரதமர் ஆவார். குமரி மண்ணையும் பிரதமர் மோடியையும் பிரிக்க முடியாது. குமரியில் 1995-ல் ஏக்தா யாத்திரையை தொடங்கிய போது மோடிக்கு முக்கிய பங்கு இருந்தது.
அடுத்த 25 ஆண்டுகளுக்கான கனவுகளுடன் பிரதமர் மோடி வருகை தந்துள்ளார். 400 தொகுதிகளில் வெற்றி என்பது வெறும் வார்த்தை அல்ல, பாஜக தொண்டர்களின் உணர்வு. 1892ல் குமரிக்கு வந்த நரேந்திர தத்தா பாறை மீது அமர்ந்து விவேகானந்தராக மாறினார். தற்போது இங்கு வந்துள்ள மோடி ஞானியாக மாறியுள்ளார். 140 கோடி மக்களின் விஸ்வகுருவாக மோடி திகழ்கிறார்.
இவ்வாறு அண்ணாமலை பேசினார்.






