தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நாளை புதுச்சேரி வருகிறார்.
புதுச்சேரியில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பா.ஜ.க, என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, பிரதமர் மோடி நாளை புதுச்சேரியில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். பிரதமரின் வருகையை முன்னிட்டு நாளை ஒருநாள் மட்டும் புதுச்சேரியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கையாக விமான போக்குவரத்து மற்றும் ட்ரோன் கேமராவிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. நாளை மாலை புதுச்சேரி AFT பஞ்சாலைத் திடலில் பா.ஜ.க, சார்பில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். பிரதமரின் வருகையை முன்னிட்டு புதுச்சேரி முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.







