தென் ஆப்ரிக்காவில் உள்ள தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தென் ஆப்ரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் போராட்டங்கள் மற்றும் கலவரங்களில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால் ஜேக்கப் ஜூமாவின் எதிர்ப்பாளர்களும் கலவரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கலவரத்தினால் தென் ஆப்ரிக்காவில் உள்ள தமிழர்கள் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இந்தியர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இந்தியர்கள் உள்ளிட்ட பலரும் உயிரிழந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தென் ஆப்ரிக்காவில் உள்ள தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களின் உயிருக்கும், உடமைக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத வண்ணம் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க தென் ஆப்ரிக்க அரசை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் எனவும், தென் ஆப்ரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் இதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.







