தென் ஆப்ரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா சிறையில் அடைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் வன்முறை மற்றும் கலவரங்களால் 70க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
தென் ஆப்ரிக்க அதிபராக ஜேக்கப் ஜூமா, 2009 முதல் 2018ம் ஆண்டு வரை பதவி வகித்தார். அப்போது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குப்தா சகோதரர்களுடன் சேர்ந்து, அரசு ஒப்பந்தங்களில் பல ஆயிரம் கோடி ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான விசாரணைக் குழு முன், ஜேக்கப் ஜூமா ஆஜராக மறுத்து வந்தார். சாட்சிகள் ஆஜராகி, அவர் ஊழல் புரிந்ததற்கான ஆதாரங்களை அளித்தனர்.
நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக செயல்பட்டதாக ஜேக்கப் ஜூமாவுக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 15 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த வாரம் புதன்கிழமை ஜேக்கப் ஜூமா காவல்துறையிடம் சரண் அடைந்த பிறகு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து நாடு முழுவதும் ஜூமா ஆதரவாளர்கள் பெரும் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.
ஜூமாவின் சொந்த ஊரான க்வா ஜூலா நடால் மாகாணத்தில் சிறிதளவில் துவங்கிய போராட்டம் தொடர்ந்து கவுடாங், ஜோக்ன்னஸ்பர்க் போன்ற நகரங்களுக்கு வன்முறையாக மாறியது. வணிக வளாகங்கள், கடைகள் சூறையாடப்பட்டு வரும் நிலையில், வாகனங்கள், கட்டடங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
இதுவரை வன்முறை மற்றும் கலவரங்களில் சிக்கி 70-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 1994ம் ஆண்டுக்குப் பின்னர் அந்நாட்டில் இது போன்ற கலவரங்கள் நடப்பது இதுவே முதன் முறை என்று கூறப்படுகிறது.









