கொரோனா நிவாரண முதல் தவணையாக, ரூ.2000 வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில், தி.மு.க. 125 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். ஆளுநர் மாளிகையில் எளிமையாக நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில், மு.க.ஸ்டாலினுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
மு.க.ஸ்டாலினுடன் 33 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். பின்னர் தலைமை செயலகத்தில் முதலமைச்சருக்காக ஒதுக்கப்பட்ட அறைக்குச் சென்ற அவர், ஐந்து கோப்புகளில் கையெழுத்திட்டார்.
அதில், திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிடி கொரோனா நிவாரணத் தொகையாக குடும்ப அட்டை தாரர்களுக்கு தலா 4 ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கான முதல் உத்தரவில், ஸ்டாலின் கையெழுத்திட்டார். முதல் தவணையாக ரூ.2000 இந்த மாதமே வழங்கப்பட இருக்கிறது.
இந்நிலையில், பொது வினியோகத் திட்டத்தின் கீழ் 2000 ரூபாய் வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், தமிழ்நாட்டில் தற்போது 2,07,66,950 அரிசி குடும்ப அட்டைகள் நடைமுறையில் உள்ளன. அனைத்து அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கும் 2000 ரூபாய் நிவாரணத் தொகையை முதல் தவணையாக வழங்கி னால், அரசுக்கு ரூ .4153.39 கோடி செலவினம் ஏற்படும்.
கொரோனா நோய் தொற்றின் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை குறைக்கும் வகையிலும் , பெருந்தொற்று நேரத்தில் பொதுமக்களின் வாழ்வாதாரத் திற்கு உதவும் வகையிலும் , ரூ .4153.39 கோடி செலவில் , மே 2021 மாதத்தில் 2,07,66,950 எண்ணிக்கையிலான அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ .2000 நிவாரணத் தொகையினை முதல் தவணையாக வழங்க, அரசு ஆணையிடுகிறது என்று கூறப்பட்டுள்ளது.







