அதிமுக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், வானூர் பகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று பரப்புரை மேற்கொண்டார். அப்போது, அதிமுகவை தவறாக விமர்சிப்பது தான் திமுக தலைவர் ஸ்டாலினின் வேலை என குறிப்பிட்ட அவர், திமுக ஆட்சியில் என்ன நன்மைகளை செய்தோம் என்று ஸ்டாலின் இதுவரை எங்கேயும் கூறியதில்லை என்று குறை கூறினார்.
தொடர்ந்து உளுந்தூர்பேட்டையில் பேசிய அவர், நீட் தேர்வு, ஹைட்ரோ-கார்பன், மீத்தேன் திட்டம் போன்றவற்றை கொண்டு வந்தது திமுக ஆட்சியில்தான் என்றும், அவற்றை அதிமுக அரசு தடுத்து நிறுத்தியதாகவும் தெரிவித்தார். ரிஷிவந்தியம் தொகுதியில் பரப்புரை மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினால் முதலமைச்சராக முடியாது என்றும், அவரால் எதிர்க்கட்சி தலைவர் பதவியைக் கூட தக்கவைத்துக் கொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டார்.
அதிமுகவின் இரண்டு தலைவர்களுக்கும் வாரிசுகள் இல்லை என்று குறிப்பிட்ட அவர், திமுக என்பது குடும்ப கட்சி என்றும், அந்த குடும்பத்திலிருந்து வரும் ஸ்டாலின் முதல்வராக துடிப்பதாகவும் விமர்சித்தார்.







