1.97 கோடி பேருக்கு எப்படி வேலை கொடுக்க முடியும்? மு.க.ஸ்டாலின்

234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிபெறும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மதுரை திருமங்கலத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட ஸ்டாலின், இந்தியாவில் 15 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அறிவிக்கப்பட்டு 14 இடங்களில் வேலை…

234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிபெறும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மதுரை திருமங்கலத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட ஸ்டாலின், இந்தியாவில் 15 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அறிவிக்கப்பட்டு 14 இடங்களில் வேலை நடைபெற்று வருவதாகவும், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இன்று வரை ஒரு செங்கல் கூட வைக்கவில்லை எனவும் குற்றம்சாட்டினார். திமுக ஆட்சிக்கு வந்தால் திருமங்கலத்தில் நவீன பேருந்து வசதி செய்து தரப்படும் என்று உறுதியளித்த அவர், 234 தொகுதியிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

திருநெல்வேலியில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின், திருமணத்திற்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தை இந்தியாவிலேயே முதலில் அறிமுகப்படுத்தியது திமுக அரசுதான் எனக் கூறினார். அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி 1.97 கோடி பேருக்கு எப்படி வேலை கொடுக்க முடியும்? எனக் கேள்வி எழுப்பிய ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்ததும் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படும் எனக் கூறினார்.

மேலும், திமுக ஆட்சிக்கு வந்ததும் கொரோனா நிவாரண நிதியாக, 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும், கருணாநிதி பிறந்தநாளில் இத்திட்டம் செயல்படுத்தப்படும், என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். முன்னதாக கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையில், தேர்தல் பரப்புரை மேற்கொண்ட மு.க.ஸ்டாலின், திமுகவில் தாம் 14 வயதில் இணைந்து, படிப்படியாக அரசியலில் முன்னேறியதாக தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.