மாயமான இளைஞர்: 20 மாதத்துக்குப் பின் பாக்.கில் இருந்து திரும்பினார்!

காணாமல் போல இளைஞர் ஒருவர், 20 மாதத்துக்குப் பிறகு பாகிஸ்தானில் இருந்து திரும்பி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மத்திய பிரதேச மாநிலம் தமோ மாவட்டத்தில் உள்ள, படிசிஷ்புர் கிராமத்தைச் சேர்ந்தவர் பரிலால். மனநலம்…

காணாமல் போல இளைஞர் ஒருவர், 20 மாதத்துக்குப் பிறகு பாகிஸ்தானில் இருந்து திரும்பி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மத்திய பிரதேச மாநிலம் தமோ மாவட்டத்தில் உள்ள, படிசிஷ்புர் கிராமத்தைச் சேர்ந்தவர் பரிலால். மனநலம் சரியில்லாத இவர், கடந்த 2017 ஆம் ஆண்டு காணாமல் போனார். இவரை பல்வேறு இடங்களில் தேடிய குடும்பத்தினர், பின்னர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனர்.

இந்நிலையில், அட்டாரி எல்லையில் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் அவரை இந்திய பாதுகாப்பு படையினரிடம் சமீபத்தில் ஒப்படைத்துள்ளனர். அவர் வழி தவறி பாகிஸ்தானுக்குள் சென்றதாகவும் அங்கு 20 மாதங்களாக சிக்கிக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு தன்னை தொழிலாளியாக ரயிலில் சிலர் அழைத்து சென்றாகக் கூறியுள்ள அவர், தன்னை பாகிஸ்தான் அதிகாரிகள் இரண்டு முறை தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் பெரிய வித்தியாசம் ஏதும் தெரியவில்லை என்று கூறியுள்ள அவர், மீண்டும் வீட்டுக்குத் திரும்பியதில், அவர் குடும்பத்தினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே மத்திய பிரதேச மாநிலத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் காணாமல் போவதும் பின்னர் அவர்கள் பாகிஸ்தானில் இருந்து திரும்புவதும் அடிக்கடி நடக்கிறது. உடல் உறுப்புகளுக்காக ஏழைகளும் மனநலம் பாதிக்கப்படுபவர்களும் அங்கு கடத்தப்படுகிறார்களா என்கிற சந்தேகத்தை இது ஏற்படுத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.