அமைச்சர் நிர்மல் குமார் மீது திமுக உரிமை மீறல் புகார்!

அமைச்சர் நிர்மல் குமார் மீது திமுக சார்பில் சபாநாயகரிடம் உரிமை மீறல் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் மிசா குறித்து பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டிருந்தது. இந்த மனுவின் நிலை குறித்து அறிய இன்று திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எ.வ.வேலு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை சந்தித்தனர். அப்போது, சட்டப்பேரவை கூட்டத்தொடரில் உண்மைக்கு மாறாக பேசிய சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் மீது திமுக சார்பில் சபாநாயகரிடம் உரிமை மீறல் புகார் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து எ.வ.வேலு மற்றும் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், “சட்டப்பேரவையில் அமைச்சர் நிர்மல் குமார் ஆதாரமற்ற செய்திகளைப் பேசுகிறார். உண்மைக்கு மாறான தகவல்களைப் பரப்பி வருகிறார். அவர் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபாநாயகரிடம் மனு அளித்துள்ளோம். நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் இணைந்து அமைச்சர் நிர்மல் குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு கொடுத்துள்ளோம்.

சட்டமன்றத்தில் இருப்பவர்கள் பற்றித்தான் பேச வேண்டும். இல்லாதவர்களைப் பற்றிப் பேசினால் பேரவை மரபுக்கு எதிரானது. அமைச்சர் நிர்மல் குமார் மீது மட்டுமல்லாமல், சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு கொடுத்துள்ளோம். தவறான செய்திகளை சட்டமன்றத்தில் அமைச்சர்கள் பேசுகிறார்கள்” என்றார்.

இதனைத் தொடர்ந்து பேசிய எ.வ.வேலு, “அமைச்சர்கள் துறை சார்ந்த கேள்விகளுக்கு பதிலளிக்காமல் தேவையற்றதைப் பேசுகிறார்கள். பழைய செய்திகளை மீண்டும் பேசுகிறார்கள். அதுதான் டைவர்ஸ் பாலிடிக்ஸ். தவறுகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்காமல் பழைய பஞ்சாங்கங்களைப் பேசி வருகிறார்கள்.

மிசா மாபெரும் ஜனநாயகப் போராட்டம். 419 பேர் திமுகவின் மிசா போராட்டத்தின்போது கைது செய்யப்பட்டார்கள். அவர்களின் தியாகத்தை கொச்சைப்படுத்தக் கூடாது.

குற்றச்சாட்டுகள் எல்லாம் உண்மை அல்ல, சர்க்காரியா கமிஷனில் குற்றச்சாட்டுகள்தான் வைக்கிறார்கள். அமைச்சர்கள் கேட்கின்ற கேள்விகளுக்கு முறையாக பதிலளிக்காமல், முடியாமல் டைவர்ஷன் பாலிடிக்ஸ் செய்து வருகிறார்கள்” என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.