பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது, “ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை, கால தாமதமாக செப்டம்பர் மாதம் திறக்கப்பட்டதால், தமிழகத்தின் குறுவை சாகுபடி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் ஏக்கருக்கு ₹10,000- த்திற்கும் அதிகமாக நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் வெளியாகியுள்ள செய்தியை முதலமைச்சர் விஜய்
அவர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
கோடை காலம் முடிந்தும் கூட, தமிழகம் முழுவதும் அனல் காற்று கொளுத்துகிறது, நிலத்தடி நீர் பெருமளவில் குறைந்து விட்டது, காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் அரசு செய்யும் தொடர் சூழ்ச்சிகளால் தமிழகத்தின் நீர் நிலைகளும் வறண்டு வருகின்றன. இதனால் ஏற்கனவே பயிரிடப்பட்ட பயிர்கள் நீர் இல்லாமல் கருகி வருவதுடன், தமிழகத்தின் சாகுபடி நிலப்பரப்பு குறையும் அபாயமும் உள்ளது.
நாகப்பட்டினத்தில் கடந்த ஆண்டு சுமார் 30,000 ஹெக்டேராக இருந்த குறுவை சாகுபடி, இந்த ஆண்டு வெறும் 1,720 ஹெக்டேராகச் சுருங்கியுள்ளதாகவும், திருவாரூரிலும் 77,573 ஹெக்டேரிலிருந்து 46,338 ஹெக்டேராக குறைந்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ள நிலையில், தவெக அரசு இனியும் தாமதித்தால், தமிழகத்தின் விவசாயம் முற்றிலுமாக நொடிந்து விடும்.
எனவே, குறுவை சாகுபடியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை உடனடியாக வழங்குவதோடு, சம்பா சாகுபடியைப் பாதுகாக்க சிறப்பு தொகுப்பையும் அறிவிக்க வேண்டுமென முதலமைச்சர் விஜயை வலியுறுத்துகிறேன்.




