திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராகியுள்ளார். தொடக்கத்திலேயே டாப் 10
அமைச்சர்களில் ஒருவராகியுள்ள உதயநிதியின் உத்தேச ஆக் ஷன் பிளான் என்ன ?பார்க்கலாம்.
தமிழ்நாடு அரசின் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராகியுள்ளார் உதயநிதி ஸ்டாலின். இத்துடன், சிறப்பு
திட்டங்கள் செயலாக்கத்துறை, வறுமை ஒழிப்பு திட்டங்கள் மற்றும் கிராமப்புற கடன்கள் துறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த துறைகள் அனைத்துமே
முக்கியத்துவம் வாய்ந்த துறைகள் என்கிறார்கள் அதிகாரிகள். இவற்றின் மூலம் அனைத்து தரப்பிலும் அவர் பெயர் சொல்லும் வகையில் செயல்படுவார் என்கிறார்கள் கட்சியின் மூத்த தலைவர்கள்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்றதும், முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை நடத்த 47 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
நலிந்த விளையாட்டு வீரர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தின் கீழ் 9 பேருக்கு ஓய்வூதியம் வழங்குதல், துப்பாக்கிச்சுடும் வீராங்கனை
நிவேதிதாவிற்கு 4 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்குவது ஆகிய 3 கோப்புகளில் கையெழுத்திட்டார். தமிழ்நாட்டை விளையாட்டுத்துறையின் தலைநகராக்குவோம் எனகிறார் அமைச்சர் உதயநிதி. அதுமட்டுமின்றி தனது செயல்பாடுகளால் விமர்சனங்களுக்கு பதில் அளிப்பேன் என்றும் சொல்லியுள்ளார் என்கிறார். ஒரு செயல்திட்டத்தோடு தான் இப்படி அவர் சொல்லியுள்ளார் என்கிறார்கள் மூத்த அமைச்சர்கள். குறிப்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இருந்த சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை உதயநிதிக்கு வழங்கப்பட்டுள்ளது. அரசின் பல்வேறு சிறப்புத் திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்தும் வகையில் இந்த துறை உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி, புதிய திட்டங்களை கொண்டு வரும் போது, அவற்றை கண்காணித்து, செயல்படுத்தும் பொறுப்பும் உதயநிதிக்கு வருகிறது. இந்த ஒரு துறையின் மூலம் அனைத்து துறைகளிலும் திட்டங்களை அறிவிக்கவும், அவற்றை கண்காணிக்கவும் முடியும் என்கிறார்கள் அதிகாரிகள்.
மேலும், அனைத்து தொகுதிகளிலும் மினி ஸ்டேடியம் அமைக்கப்படும் என்கிற திமுகவின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. குறிப்பாக, கிராமங்களில் முன்மாதிரி விளையாட்டரங்குகள் அமைக்கப்பட உள்ளன. விளையாட்டுத்துறையின் மூலம்
இளைஞர்களை ஈர்க்கும் திட்டங்கள் ஒருபுறம் இருக்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்பு துணை முதலமைச்சராகவும் உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் இருந்த போது, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சுழல் நிதி அளித்து பெரிதும் கவனம் ஈர்த்ததைப் போல், கிராமப்புற கடன், வறுமை ஒழிப்பு திட்டங்கள் மூலம் பேர்
சொல்லும் பிள்ளையாக வலம் வரும் செயல்திட்டங்களும் இருக்கின்றன என்கிறார்கள்.
அதிகாரிகள் குழு
உதயநிதி ஸ்டாலினுக்கு மூத்த நேர்முக உதவியாளராக மணிராஜ் ஐஏஎஸ், இளநிலை நேர்முக உதவியாளராக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய கண்காணிப்பாளர் சதாசிவம் மற்றும் அலுவலக உதவியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். முக்கியமாக, விளையாட்டுத்துறை முதன்மைச் செயலாளர் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி அதுல்ய மிஸ்ரா உள்ளார், கிராமப்புற கடன், வறுமை ஒழிப்புத் திட்டங்கள் ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் வருகின்றன. இந்த துறையின் செயலாளராக அமுதா ஐ.ஏ.எஸ் உள்ளார். சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை முதன்மை
செயலாளர் உதயச்சந்திரன், விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர், செயலர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் திட்டங்களை வகுத்து, செயல்படுத்தும் வல்லுநர் குழுவாகவும் செயலாற்ற உள்ளனர் என்கிறார்கள்.
நிர்வாகத்துறையில் அதிக அனுபவம், செயல்திறன் மிக்க அதிகாரிகள் குழு, உதயநிதிக்கு வழிகாட்டும் வகையில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பங்களிப்புடன் பல்வேறு சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இளைஞர்கள், கிராமப்புற மக்கள், பெண்கள் மேம்பாடு என அனைத்து தரப்பிற்கும் நலத் திட்டங்கள் சென்றடையும் வகையில் இருக்கும்.
இவற்றை மாவட்டவாரியாக சென்று அமைச்சர் உதயநிதி தொடங்கி வைக்கவும் உள்ளார் என்றும் கூறப்படுகிறது. மக்கள் நலத்திட்டங்கள் மூலம் அனைத்து மக்களிடம் செல்வார் என்கிறார்கள் திமுகவினர். திமுக இளைஞரணிச் செயலாளராக கட்சியின் இளைய தலைமுறையினருக்கு நெருக்கமான உதயநிதி, இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக அனைவரின் மனங்களையும் வெல்வாரா? பார்க்கலாம்…
நியூஸ் 7 தமிழில் சொல் தெரிந்து சொல் பகுதியில் ஒளிபரப்பான காணொளியைக் காணலாம்..
வீடியோ செய்தி – https://www.youtube.com/watch?v=NbcnC5ZYCmg
_ ஜோ மகேஸ்வரன்