நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவும் பாஜகவும் கூட்டணி அமைக்க உள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் தெரிவித்துள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி நிறுவன இரண்டாவது சுரங்கம் முன்பு அதிமுக சார்பில் என்எல்சி நிறுவனத்துக்கு வீடு, நிலம் கொடுத்த பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
முன்னாள் சட்டத்துறை அமைச்சரும் அதிமுகவின் அமைப்புச் செயலாளருமான சி.வி.சண்முகம் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பங்கேற்றுப் பேசிய சி.வி. சண்முகம், மத்தியில் ஆளும் பாஜக அரசை எதிர்ப்பது போல் நடித்துக் கொண்டு, அவர்களுக்கு ஆதரவாக திமுக செயல்படுவதாகக் குற்றம் சாட்டினார்.
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தை கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகளை கழற்றி விட்டுவிட்டு திமுகவும் பாஜகவும் கூட்டணி அமைக்க உள்ளார்கள் என்றும் சி.வி. சண்முகம் இக்கூட்டத்தில் பேசினார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக அணியில் பாஜக நீடித்தது. அதன் மூலம் பாஜக 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும், இப்போதும் பாஜகவுடன் இணைக்கமாகவே இருக்கிறது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் வரும் தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்று ஒரு இடத்திலும், தமிழ்நாட்டில் பாஜக 25 இடங்களில் வெல்லும் என்று மற்றொரு இடத்திலும் பேசி இருக்கிறார். இந்தச் சூழலில் அதிமுக முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருவமான சி.வி. சண்முகத்தின் திமுக – பாஜக கூட்டணி குறித்த பேச்சு , அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.