விரைவில் சிமெண்ட் விலை குறையும் என எதிர்பார்க்கிறோம்: அமைச்சர் தங்கம் தென்னரசு

கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். கொரோனா காலமான தற்போது சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இதனால் வீடு உள்ளிட்ட…

கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.


கொரோனா காலமான தற்போது சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இதனால் வீடு உள்ளிட்ட கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் தொல்லியல் துறை, அருங்காட்சியகங்கள், கலை பண்பாட்டுத்துறை ஆய்வுக்கூட்டம் சென்னை நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று நடைபெற்றது. அதில், தொழில் மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, “சிமெண்ட் விலையை குறைக்க உற்பத்தியாளர்களிடம் பேசியுள்ளோம். எந்த வகையிலும் சாதாரண மனிதன் பாதிக்கப்படக்கூடாது. அரசின் கட்டுமானப் பணிகள், சாதாரண மனிதனின் கட்டுமானப்பணிகள் நடைபெற விலை கட்டுக்குள் இருக்க வேண்டும். விரைவில் சிமெண்ட் விலை குறைப்பை எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்தார்.

சிமெண்ட் விலை அதிகரிக்காமல் இருப்பதற்கும், கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்த அமைச்சர், “புதிய தொழில்களை தொடங்குவதற்கு சிலர் விருப்பம் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் தொழில்களை தொடங்க தொழில் முனைவோர் மிகுந்த நம்பிக்கையுடன் ஆர்வமாக உள்ளனர்” என விவரித்தார். கீழடி 7 ஆம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது. அகழ் வைப்பகம் வைக்கக்கூடிய பணிகள் நடைபெற்று வருகிறது என்ற தகவலையும் அமைச்சர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.