சொத்து குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மணிமேகலை ஆகியோரை ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2006ம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக, 2012-ம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டது.
அரசியல் காரணங்களுக்காக கடந்த அதிமுக ஆட்சியில் தன் மீது அவதூறு ஏற்படுத்தும் வகையில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், தன்னையும், தனது மனைவியையும் சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுவிக்க கோரி மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் தங்கம் தென்னரசு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி கிறிஸ்டோபர் முன்பு விசாரணைக்கு வந்தது. இதில் அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மணிமேகலை ஆகியோர் மீது தொடரப்பட்ட சொத்து குவிப்பு வழக்கில் முகாந்திரம் இல்லை எனக் கூறி அவர்களை விடுவித்து நீதிபதி கிறிஸ்டோபர் உத்தரவிட்டார்.







