கொரோனா தொற்று அறிகுறி இருந்தாலே ஆக்சிஜன் படுக்கை வசதி மற்றும் ரெம்டெசிவர் போன்றவற்றை தேடி செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை வியாசர்பாடியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் கலைக்கல்லூரியில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் சித்தா சிகிச்சை மையத்தை மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், சித்தா, ஆயுர்வேதம், யுனானி உள்ளிட்ட மருத்துவத்தை பயன்படுத்திக்கொள்ள முதலமைச்சர் அறிவுறித்தியுள்ளதாகவும், அதன் அடிப்படையில் இந்த மையம் துவங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். தமிழகத்தில் 12 இடங்களில் சித்தா கொரோனா சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது என்றும், ஒரு வாரத்தில் மேலும் 12 இடங்களில் சிகிச்சை மையம் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
தொற்று அறிகுறி இருந்தாலே ஆக்சிஜன் படுக்கை வசதி, ரெம்டெசிவர் போன்றவற்றை தேடி செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.







