தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி எஸ் எஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி வளர்மதி, மகள் அஸ்விகா. கோவில்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் அஸ்விகா 4 வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் பள்ளி முடிந்து மனைவி மற்றும் மகளை வீட்டிற்கு அழைத்துச் செல்லும்போது பசுவந்தனை சாலையில் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே வளர்மதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட அஸ்விகா கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட போது வரும் வழியிலேயே அஸ்விகா உயிரிழந்துள்ளார்.
மேலும் படுகாயம் அடைந்த ரமேஷ் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து தொடர்பாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவனின் கண் முன்னே மனைவி மற்றும் குழந்தை உயிரிழந்த சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.




