மத்திய அரசால் தடைசெய்யப்பட்ட பயோ டீசல், சேலம் மாவட்டத்தில் தங்கு தடையின்றி அமோகமாக விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
கச்சா எண்ணெயின் இறுதிக் கழிவில் தயாரிக்கப்படும் பயோ டீசலை பயன்படுத்தும் வாகனங்களில் உள்ள பம்புகள் பழுதடைவதால், அதற்கு மத்திய, மாநில அரசுகள் தடை விதித்துள்ளன. எனினும், சேலம் மாவட்டத்தில் தொப்பூர், மேச்சேரி, ஜோடுகுளி உள்ளிட்ட பகுதிகளிலும், நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தங்கு தடையின்றி விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
ஒரு லிட்டர் டீசல் விலை 86 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், பயோ டீசல் 74 ரூபாய்க்கு கிடைப்பதால் சரக்கு லாரி உரிமையாளர்கள் அதனை பயன்படுத்துகின்றனர். இதனால் சுத்தமான டீசல் விற்பனையாகாமல் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும், சட்டவிரோத விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.







