தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. இக்கூட்டத்திற்கு வந்திருந்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் ‘வாயை திறங்க சி.எம்.சார்’ என்று எழுதப்பட்டிருந்த கருப்பு பேட்ஜ் அணிந்து வந்தனர். அவர்கள் தமிழ் நாட்டில் நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமை, கொலைகள், மின்வெட்டு , விவசாயிகள் போராட்டம், எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து முதலமைச்சர் விஜய் கருத்து தெரிக்க வேண்டும் எனக் கூறி கருப்பு பேட்ஜ் அணிந்து கண்டன முழக்கங்கள் எழுப்பியபடி சட்டமன்றத்திற்குள் நுழைந்தனர். இது தமிழ்நாடு முழுவதும் பேசு பொருள் ஆனது.
இதற்கு அமைச்சர் நிர்மல் குமார் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரை என்பதால் ஆளுநர்தான் பேசுவார். ஆளுநர் உரைக்கு இடையே யாரும் பேசமாட்டார்கள். முதலமைச்சர் பதிலுரை என்று இருக்கிறதோ, அன்று முதலமைச்சர் விஜய் பேசுவார். உதயநிதி, 5 வருடமாக சட்டப்பேரவைக்கு வந்திருக்கிறார், துணை முதலமைச்சராகவும் இருந்திருக்கிறார். என்ன நடைமுறை என்றே அவருக்கு தெரியவில்லை” என்று அவர் கூறினார்.




