தமிழ்நாட்டின் 17-வது சட்டப்பேரவியின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கருப்பு பேட்ஜ் அணிந்து பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுநர் அர்லேக்கர் உரை நிகழ்த்தினார். இதனையடுத்து சட்டமன்றத்தின் முதல் நாள் நிறைவடைந்தது.
இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, “திமுக அரசு தயாரித்து கொடுத்த எந்த உரையையும் கடந்த 5 வருடங்களாக, ஆளுநர் முழுமையாக படித்ததே இல்லை, அதில் பல திருத்தங்களை ஆளுநர் செய்வார். ஆனால் இந்த முறை அரசு என்ன உரை தயாரித்து கொடுத்ததோ, அதை அப்படியே ஒரு எழுத்துக்கூட மாறாமல் வாசித்துள்ளார். இதிலிருந்தே இந்த அரசுக்கும் பாஜகவுக்கும் ஒரு தொடர்பு ஏற்பட்டுவிட்டதோ என்கிற எண்ணம் அனைவருக்குமே ஏற்பட்டிருக்கிறது.
ஆட்சியாளர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு என்னென்ன வாக்குறுதிகள் கொடுத்தார்கள், அதை எப்படி செயல்படுத்த போகிறார்கள் என்பதை முன்கூட்டியே கூறும் விதமாகவே ஆளுநர் உரை இருக்கும். ஆனால் இன்று ஆளுநர் உரையை பார்த்தால், ஆளும் கட்சியினர் ரீல்ஸ் போடுவதற்கான content material-ஆக ஆளுநர் உரை அமைந்துள்ளது. அந்த அளவிற்கு முதலமைச்சர் குறித்தும், அவரின் கட்சியை குறித்தும் சுயபுராணம் பாடிக்கொள்ளக்கூடிய உரையாக உள்ளது.” என்று அவர் கூறினார்.




