கரூரில் புதிதாக 80 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய சிறப்பு கொரோனோ மையத்தை அமைச்சர் செந்தில் பாலாஜி திறந்து வைத்தார்.
கரூரில் கொரோனோ பரவலைத் தடுக்கவும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது. இந்த வரிசையில் கரூர் நகரின் மையப்பகுதியில் பயன் படுத்தாமல் பூட்டி கிடந்த பழைய அரசு மருத்துவமனை கட்டிடத்தை புணரமைத்து ஆக்சிஜன் வசதியுடன் 80 படுக்கை வசதி ஏற்படுத்த திட்டமிடப்பட்டது.
செந்தில் பாலாஜி பவுண்டேஷன் மற்றும் தனியார் ஏற்றுமதி நிறுவன பங்களிப்புடன் 1 கோடியே 2 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த கொரோனா சிகிச்சை மையத்தை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயர்த்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே, அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் முத்துச்செல்வன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, கரூர் மாவட்டத்தில் ஆக்சிஜன் வசதியுடன் 1300 படுக்கை வசதி ஏற்படுத்த திட்டமிட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது வரை 932 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் சில தினங்களில் மீதமுள்ள படுக்கைகளும் தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.







