ஐதராபாத்தில் இருந்து சென்னைக்கு ரயிலில் வந்த பயணியிடம் கணக்கில் காட்டப்படாத 28 லட்சம் ரூபாய் பணத்தை ரயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.
கொரோனா பரவல் அதிகரித்ததையடுத்து தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கின் காரணமாக டாஸ்மாக் மூடப்பட்டதையடுத்து மதுப்பிரியர்கள் மது கிடைக்காமல் அவதியடைந்து வருகின்றனர். மேலும், சிலர் ஒரு படி மேலே சென்று போதைக்காக சானிடைசரில் தண்ணீர் கலந்து குடிக்கும் அவலமும் நிகழ்ந்துவருகிறது. பல இடங்களில் சிலர் கள்ளச்சாராயம் காய்ச்சி போலீஸாரிடம் பிடிபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், அண்டை மாநிலங்களான ஆந்திரா கர்நாடகாவில் இருந்து அதிக அளவில் மது பாட்டில்கள் ரயில் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்படுவதாக ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியை சேர்ந்த கோணகண்டியா சந்திரசேகர் என்பவர் சந்தேகப்படும் வகையில் ரயில் நிலையத்தில் சுற்றித்திரிந்துள்ளார். போலிசார் அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டபோது அவரது இடுப்பு பகுதியில் கணக்கில் காட்டப்படாத ரூ.28 லட்சம் பணத்தை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, பணத்தை பறிமுதல் செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பறிமுதல் செய்த பணத்தை வருமான வரிதுறையிடம் ஒப்படைத்தனர்.







