இட ஒதுக்கீடு விவகாரத்தில் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று முடிவெடுக்க முடியாது என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் பதிலுரையாற்றினார். அப்போது பேசிய அவர், மத்திய அரசு தேசிய அளவில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த முன்வர வேண்டும் எனவும், 40 ஆண்டுக்கு முந்தைய அம்பாசங்கர் , ஜனார்த்தனம் கமிசன் அறிக்கை இப்போது சரியாக வராது என்றார்.
பல்வேறு சமுதாய மக்கள் இங்கு வாழ்கின்றனர். எடுத்தோம் கவிழ்த்தோம் என இட ஒதுக்கீட்டு விசயத்தில் செயல்பட முடியாது எனவும், தனிப்பட்ட எண்ணிக்கை அடிப்படையில் எந்த சாதிக்கும் இட ஒதுக்கீடு கொடுக்க கூடாது என நீதிமன்றம் கூறியுள்ளதாகவும், அதற்குரிய சமூக, பொருளாதார தரவுகளை திரட்ட வேண்டும் என்பதால் வன்னியர் உள் ஒதுக்கீட்டிற்காக முதலமைச்சர் உத்தரவுப்படி மூத்த வழக்கறிஞர்கள் மூலம் வழக்கு நடத்தியதாகக் கூறினார்.
கருத்து வேறுபாடு கிடையாது எனவும், கல்வி , பொருளாதாரம் , வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றை கணக்கில் கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. கன்னியாகுமரி முதல் கிருஷ்ணகிரி வரை தமிழகத்தில் பல சமூகங்கள் இருக்கின்றன, எனவே ஜி.கே மணி கூறுவதுபோல் 10 நாளில் எல்லாம் கணக்கெடுப்பை மேற்கொண்டுவிட முடியாது என்றார். பொறுத்தார் பூமி ஆள்வார்… என அவர்களுக்கு சொல்லிக் கொள்கிறேன் என கூறிய ராஜகண்ணப்பன், மத்திய அரசு மாநில அரசை இணைத்து சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.








