கர்நாடக பாஜகவில் அதிருப்தியில் உள்ள அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் மதசார்பற்ற ஜனதா தள கட்சியில் இணைய உள்ளதாக அக்கட்சியின் தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம் 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 13-ந் தேதி தொடங்குகிறது. காங்கிரஸ் கட்சி இதுவரை 2 கட்டமாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதேபோல் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியும் 93 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துவிட்டது.
எனினும் ஆளும் பாஜகவில் வேட்பாளர்களை இறுதி செய்வதில் இழுபறி நிலை நீடித்தன. வேட்பாளர் பட்டியல் தொடர்பாக பாஜகவின் உயர்நிலை ஆலோசனை கூட்டம் டெல்லியில் இரண்டு நாட்களாக நடைபெற்றது. அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில் பாஜக வின் வேட்பாளர் பட்டியல் இரண்டு கட்டங்களாக வெளியிடப்பட்டது.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காததால், பாஜக நிர்வாகிகள் சிலர் அதிருப்தியில் இருந்தனர். இந்த நிலையில், அதிருப்தி பாஜக தலைவர்கள் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் நாளை இணைய உள்ளதாக குமாரசாமி தெரிவித்துள்ளார்.
பாஜக மூத்த தலைவர் தொட்டப்ப கவுடா பாட்டீல் உள்ளிட்டோர் ஜேடிஎஸ்-ல் இணைவதாக குமாரசாமி கூறியுள்ளார். உத்தர கர்நாடகாவில் 30 முதல் 40 இடங்களில் வெற்றி பெறும் முனைப்பில் தமது கட்சி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாளை 2ஆவது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








