திருச்சியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்துதரப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
திருச்சியில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ள இடங்களை நேரில் ஆய்வு செய்த தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு அடிப்படை கட்டமைப்புகளை விரைவில் சரி செய்து தருவதாக மக்களிடம் உறுதி அளித்தார்.
தமிழ்நாட்டின் வடகிழக்கு பருவமழை சில நாட்களாக தொடர்ந்து பெய்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. நீர் நிலைகளுக்கு வழக்கத்துக்கு மாறாக, அதிக அளவில் தண்ணீர் பெருக்கெடுத்து வருகிறது. பல பகுதிகளில் விவசாய நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர்.
திருச்சி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட எடமலைப்பட்டி புதூர் காந்தி நகர் பகுதிகளில் மழை நீர் சூழ்ந்த குடியிருப்பு பகுதிகளையும் கோரையாற்றின் கரைப்பகுதியில் மேற்கொள்ளப் பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தமிழக நகராட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டார்.
இதனைத் தொடர்ந்து குடியிருப்புப் பகுதிகளில் சூழ்ந்துள்ள மழை நீரை வெளியேற்றவும் கரைகளை மேலும் பலப்படுத்தி மழைநீர் உள்ளே வராத அளவிற்கு நடவடிக்கை எடுக்கவும் மாநகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். நீரால் சூழப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு உணவு மற்றும் நிவாரண உதவிகளை வழங்கினார். மேலும் முந்தைய ஆட்சி காலத்தில் செய்ய தவறிய அடிப்படை கட்டமைப்பு களை விரைவில் சரி செய்து தருவதாக மக்களிடம் உறுதி கூறினார்.








