தமிழ்நாடு முழுவதும் நியூஸ் 7 தமிழ் செய்தியாளர்கள் கள ஆய்வு மேற்கொண்டு மக்கள் சொல்லும் பாதிப்பையும், தீர்வுகளையும் பதிவு செய்து வருகின்றனர்.
தொடர் மழை காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் தேங்கியுள்ள மழைநீர், மழை நின்ற பின்னரும் கூட வடியாமல் உள்ளது. இதன் காரணமாக பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து, கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை (21.11.2021) சென்னையில் “தண்ணீர் தேங்கியதற்கு காரணம் என்ன, தண்ணீர் தேங்காமல் இருக்க தீர்வு என்ன?” என நியூஸ் 7 தமிழ் தொடர் நேரலையை, வெள்ளம் பாதித்த பகுதிகளிலிருந்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றது.
https://twitter.com/news7tamil/status/1464858187773865987
அதன் தொடர்ச்சியாக இன்று, தமிழ்நாடு முழுவதும் காலை 10 மணி முதல் வெள்ளம் பாதித்த பகுதிகளிலிருந்து கள ஆய்வு மேற்கொண்டு மக்கள் சொல்லும் பாதிப்பையும், தீர்வுகளையும் தொடர் நேரலையாக ஒளிபரப்பு செய்து வருகிறது நியூஸ் 7 தமிழ்.
இதன் ஒரு பகுதியாக, சென்னை பெரும்பாக்கம் பகுதியில் உள்ள மக்கள் கூறுவதாவது: “எங்கள் பகுதியில் மூன்று நாட்களாக மின்சாரம் இல்லை, எவ்வித அடிப்படை வசதியும் இல்லை. குழந்தைகள் பெரியவர்கள், நோயாளிகள் என பலரும் இந்த பகுதியில் வசித்து வருகின்றோம்.
அவசரத்திற்கு, ஆம்புலன்ஸ் கூட வருவத்தில்லை. நாங்கள் என்ன அகதிகளா? எங்களை ஏன் யாரும் வந்து பார்ப்பது இல்லை. நாங்கள் முதலமைச்சரை ராஜா போல பார்க்கின்றோம். அவர்தான் எங்களை வந்து பார்க்க வேண்டும், காப்பாற்ற வேண்டும். அரசு மருத்துவமனையில், மருத்து மாத்திரை கூட வாங்க முடியவில்லை.
ஒரு லட்சம் மக்களுக்கு மேல் இந்த பகுதியில் வசித்து வருகிறோம். போதிய உணவு, பால் எங்களுக்கு கிடைக்கவில்லை. கர்ப்பிணி பெண்கள் பலரும் இங்கு வசித்து வருகிறார்கள். இரவு பத்து மணி 11 மணிக்கு சாப்பாடு கொடுத்தால் எப்படி சாப்பிட முடியும்? இதேபோலதன் ஒவ்வொருமுறையும் நாங்கள் பாதிப்பை சந்தித்து வருகிறோம்” என சென்னை பெரும்பாக்கம் பகுதியில் உள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.








