மாற்றுத் திறனாளிகளை அலைக்கழிக்க வைப்பதாக குற்றம்சாட்டி ஆவின் இல்லத்தை முற்றுகையிட்ட டிசம்பர் 3 இயக்கத்தினரிடம் உடனடியாக வீடியோ காலில் பேச்சுவார்த்தை மேற்கொண்டு போராட்டத்தை முடித்து வைத்தார் அமைச்சர் நாசர்.
தமிழ்நாடு முழுவதும் ஆவின் பால் முகவர் விண்ணப்பங்களை முறையாக பரிசீலிக்காமல் மாற்றுத் திறனாளிகளை அலைக்கழிக்க வைப்பதாக குற்றம் சாட்டி சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் இல்லத்தை டிசம்பர் 3 இயக்கத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
ஆவின் பால் முகவருக்கு விண்ணப்பித்த விழுப்புரத்தைச் சேர்ந்த மாரிமுத்து என்ற நபர் எட்டு முறை மரக்காணத்திற்கும், விழுப்புரத்திற்கும் ஆவின் நிறுவனத்தால்
அலைக்கழிக்கப்பட்டதாலும், மாற்றுத் திறனாளிகளிடம் கையூட்டு பெரும் வகையில்
அதிகாரிகளின் நடவடிக்கை இருப்பதாக குற்றம் சாட்டி போராட்டம் நடைபெற்றது.
ஆவின் இல்லத்தின் உள்ளே சென்று முற்றுகை போராட்டம் நடத்தியதால் ஆவின் நிர்வாக இயக்குனர் சுப்பையா போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சு வார்த்தை மேற்கொண்டார். பேச்சுவார்த்தையில், டிசம்பர் 3 இயக்கம் சார்பாக மாற்றுத் திறனாளிகள் ஆவின் நிறுவனத்தால் இனி அலைக்கழிக்கப்படக் கூடாது என்றும், ஆவின் நிறுவனங்களில் தேவையான அடிப்படை வசதிகளை மாற்றுத் திறனாளிகளுக்கு செய்து கொடுப்பதை உறுதி செய்யும் வகையில் அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும், சுற்றறிக்கை அனுப்பும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்றார்.
பின்னர், பால் வளத் துறை அமைச்சர் நாசர் காணொளி அழைப்பு வாயிலாக பேச்சுவார்த்தை மேற்கொண்டார். போராட்டத்திற்கான கோரிக்கைகள் அனைத்தும் உடனடியாக நிறைவேற்றிக் கொடுக்கப்படும் என உறுதி அளித்ததோடு, மாற்றுத் திறனாளிகள் இனி ஆவின் நிறுவனத்தால் எக்காரணம் கொண்டும் அலைக்கழிக்கப்பட மாட்டார்கள் என தெரிவித்தார். மேலும், மாற்றுத் திறனாளிகள் இனி எந்த ஒரு கோரிக்கையும் நேரடியாக என்னிடமே முறையிடலாம் என்றும் காணொளி அழைப்பின் வாயிலாக கேட்டுக் கொண்டார்.
வீடியோ காலில் உடனடியாக வந்து மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கையை கேட்டு அறிந்து அமைச்சர் உத்தரவாதம் அளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தை மாற்றுத் திறனாளிகள் கைவிட்டனர். சுற்றறிக்கை அனுப்பும் வரையில் காத்திருப்பு போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர்.
-ம.பவித்ரா









