சென்னை சைதாப்பேட்டையில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!-அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்!

சென்னை  சைதாப்பேட்டையில் 150-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்ட வேலைவாய்ப்பு முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் கலைஞர்…

சென்னை  சைதாப்பேட்டையில் 150-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்ட வேலைவாய்ப்பு முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 100 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.

அதன் ஒரு பகுதியாக சென்னை சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்,  100-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்ட தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.  இதில் 8 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு,  டிப்ளமோ,  ஐடிஐ போன்ற படிப்புகள் முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் 15 ஆயிரத்திற்கு மேல் வேலைவாய்ப்பு உள்ள 150 க்கும் மேற்பட்ட முன்னணி தொழில் நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.

இந்த  வேலைவாய்ப்பு  முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.  உடன் துணை மேயர் மகேஷ் குமார் கலந்து கொண்டார்.  இந்த வேலைவாய்ப்பு முகாமில் ஆண், பெண் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு என தனித்தனியே பதிவு செய்வதற்கு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.  அதே போல் மாற்றுத்திறனாளிகளுக்கு என பிரத்யேகமாக பணி வழங்க 14 நிறுவனங்கள் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டுள்ளன.

குறிப்பாக, அரசு சார்பில் ஆதிதிராவிடர் நலத்துறை,  சமூக நலத்துறை,  தாட்கோ உள்ளிட்டவற்றில் கொடுக்கப்படும் அரசு சலுகைகள்,  கடன் உதவித் தொகைகள் உள்ளிட்டவை குறித்து விளக்க தனி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.  மேலும், வேலைவாய்ப்பு முகாமிற்கு வருபவர்களுக்கு குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.  இன்று மாலை வரையில் இந்த வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.  அதிகப்படியானவர்களுக்கு இன்றே பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த வேலை வாய்ப்பு முகாம் செயல்படுகிறது. இன்று மதியம் அமைச்சர் மா. சுப்பிரமணியன் வேலை வாய்ப்பு முகாம் மூலம் பணி கிடைத்தவர்களுக்கு பணி ஆணையை வழங்க உள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.